நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் SummitCare முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்பவர்கள்.
நேற்றையதினம் இம்முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த 35 பேரில் 24 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் 11 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து Bondi பரவல் ஊடாக கோவிட் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் இப்பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 58,373 கோவிட் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
NSW மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள stay-at-home உத்தரவிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்றும் இக்கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் இப்போது எதுவும் தீர்மானிக்கமுடியாதுள்ளதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
குறித்த உத்தரவின்படி இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை, கல்வி(வீட்டிலிருந்து வேலைசெய்ய அல்லது கல்விகற்க முடியாதபட்சத்தில் மாத்திரம்) பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்தே இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை www.health.nsw.gov.au என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.