வெளிமாவட்டத்தவர்களின் வருகையாலேயே முல்லையில் கொவிட் தொற்று

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ளதாலேயே கொவிட் – 19 தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே பாதுகாப்புத்தரப்பினரும், அரச திணைக்களங்களும், அதிகரித்துள்ள வெளிமாவட்டத்தவர்களின் வருகையினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குடும்பங்களுடன் தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் 25பேருக்கு கடந்தமாதம் 29ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில், ஐவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கையைச்சேர்ந்த மீனவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளின்படி ஐவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதிலே குறிப்பாக ஏற்கனவே புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையிலும் வெளிமாவட்டத்தவர்களின் வருகையினாலேயே, அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதனால் குறித்த ஆடைத்தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் குறித்த ஆடைத் தொழிற்சாலை திறக்கப்படவிருந்தவேளையில், நான் முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் பேசியிருந்தேன்.

இந் நிலையில் நாளாந்தம் அந்த ஆடைத்தொழிற்சாலையிலும், ஏனைய இடங்களிலும் தமது கண்காணிப்புக்கள் கூடுதலாக இருக்குமென முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

அந்தவகையிலே புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற பாரிய தொற்றின் பிற்பாடு, சுகாதாரத் தரப்பினரின் சிறப்பான செயற்பாடுகள் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர். சுகாதாரத் தரப்பினரின் அறிக்கைகளின் ஊடாக இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

எனவே இந்த இக்கட்டானதொரு சூழ்நிலையில் , இந்த கொரோனா பெருந்தொற்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டுக்குள் வைத்திருக்க கரிசனையோடு செயற்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மற்றும், அவரோடு இணைந்து செயற்படுகின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களின் இந்த கரிசனையான செயற்பாடுகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.

இவ்வாறானதொரு சூழலில் நாயாற்றில் வெளிமாவட்டத்தவருடைய வருகை அதிகமாகியிருக்கின்றது.

இவ்வாறாக வெளிமாவட்டத்திலிருந்து வருகைதந்தவர்களில் ஐவர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைமுடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

இது முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை அபாயகரமானதாகும். ஏற்கனவே புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாயைில் இதேபோன்று வெளிமாவட்டத்தவர்களைச் சேர்ந்தவர்களால் பாரிய தொற்று ஏற்பட்டு சுகாதாரத் தரப்பின் அயராத முயற்சியால் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந் நிலையில் இவ்வாறு மீண்டும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் முல்லைத்தீவில் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் 29ஆம் திகதி முதல்தடவையாக செம்மலை கிழக்கு நாயாறுப்பகுதியில் உள்ள வெளிமாவட்ட மீனவர்கள் 25பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த பரிசோதனையின் முடிவிலேயே ஐவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதாரத் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இம்மாதம் 02ஆம் திகதி 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த செம்மலை கிழக்கு நாயாற்றுப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குடும்பங்களுடன் தங்கியுள்ள மீனவர்கள் பெரும்பாலும் பதிவுகள் இன்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்பதிலும், பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் பலத்த இடர்பாடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கிருக்கும் வெளிமாவட்டத்தவர்கள் பரிசோதனைச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இந்த நாயாற்றில் தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும் இவ்வாறு பதிவின்றி தங்கியிருப்பவர்தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எதனையும் எடுக்காதது ஏன்?

நாயாறுப் பகுதியிலே பருவகால கடற்றொழிலுக்கென அனுமதிக்கப்பட்ட மீனவர்களை விட அதிகமாக வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதந்ததோடு மாத்திரமின்றி, மீனவர்கள் தமது குடும்பங்களுடன் வருகைதந்திருக்கின்றனர்.
அதிலே குறிப்பாக சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது
.
எனவே இந்த விடங்களைக் கட்டுப்படுத்தியிருக்கவேண்டிய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் அசமந்தமான போக்குடன் செயற்பட்டிருக்கின்றது. கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் இத்தகைய அசமந்தமான செயற்பாட்டை வன்மையாக் கண்டிக்கின்றேன்.

அதேவேளை இந்த விடயத்திலே பாதுகாப்புத் தரப்பினரும் தமது கடமைகளை முறையாகச் செய்யவேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே வீதிகள் எங்கும் இராணுவம் மற்றும் போலீசார் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே காவலரண்களை அமைத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கைள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிரமாக இடம்பெறும்போது செம்மலை கிழக்கு, நாயற்றுப் பகுதியிலே ஆயிரக்கணக்கான வெளிமாவட்ட மீனவர்கள் வருகைதந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எனவே முல்லைத்தீவு மாவட்டமெங்கும் இந்த வீதித் தடைகளும் காவலரண்களும் யாருக்காக அமைக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புச் செயற்பாடுகள் ஒழுங்காகஇருந்தால் இப்படியான நிலைமை முல்லைத்தீவு மாவட்டத்திலே ஏற்பாட்டிருக்காது.

ஆகவே முறையான விதத்தில் பாதுகாப்புத் தரப்பினர் தமது கண்காணிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது மாவட்டத்தைச் சார்ந்தவர்களால் ஒருபோதும் கொவிட்தொற்று அதிகரிக்கவில்லை. நிச்சயமாக வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர்களாலேயே முல்லைத்தீவுமாவட்டத்தின் கொவிட் தொற்று அதிகரித்துள்ளது.

எனவே இந்த கொவிட் – 19 பெருந்தொற்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டுக்குள் வைத்திருக்க அனைத்துத் தரப்பினரும் முறையான விதத்தில் செயற்படவேண்டும் – என்றார்.