சிறிலங்கா அரசாங்கம் ஏன் இப்படி செயற்படுகிறது?

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பலவீனமான இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுகிறது. உரப்பற்றாக்குறையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவ்வாறு இறக்குமதி செயற்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை.

மக்களைப் பற்றி சிந்திக்காமல் எதற்காக உரம் தொடர்பில் இவ்வாறு தன்னிச்சையான தீர்மானம் எடுக்கப்பட்டது ? இந்தஅரசாங்கத்திற்கு மனிதாபிமானம் இல்லை. நாட்டை நிர்வகிக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பலவீனமான உங்கள் கொள்கையினால் விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். மக்கள் அனைவரையும் கொன்று குவிப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது ? உரம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. எனவே சரியான தீர்மானத்தை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக கூறியவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர். தற்போது வடக்கில் கொலைகாரர்களால் மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதோடு அவர்களின் கைகளும் வெட்டப்பட்டுள்ளன. இந்த கொலை கும்பலை கைது செய்ய முடியாமல் போயுள்ளதா என்று தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிய அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன் என்றார் .

இந்த அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்யாகியுள்ளது. எனவே இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.