‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’

நாடாளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்‌ஷ  வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வந்தபோதே  பஷில் வருவாரென்று தெரிந்துக்கொண்டோம் என்றார்.

எதிர்க்கட்சித்  தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பற்றி  கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால் சேர் பெயிலென தெரிந்துக்கொண்டு  அதிலிருந்து மீள பஷிலைப் பயன்படுத்த பார்க்கின்றனர் என்றார்.

இந்த அரசாங்கத்தால் பொருளாதார  நிதி முகாமைத்துவத்தை முன்னெடுக்கமுடியவில்லை. அதனால்தான்  பஷில் வந்து  பொருளாதார நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பாரென நினைக்கின்றனர்.

எமது அரசாங்கத்தில்  பொருளாதாரம் தொடர்பான கல்வி அனுபவம்  தெளிவு உள்ளவர்களான  கலாநிதி ஹர்ஷ டீ சில்வா எரான் விக்ரமரத்ன ஆகியோரிடமே கையளிப்போம் என்றார்.

பொருளாதாரத்தை பலப்படுத்த பஷிலுக்கு  முடிந்திருந்தால் 2015- 2019 ஆம் ஆண்டுக்குள் செய்திருக்கலாம். 2015ஆம் அரசாங்கத்தின் தோல்விக்கு  பஷில் தான்  காரணமென  வசைப்பாடியவர்கள் இன்று பொருளாதாரத்தை பலப்படுத்த பஷிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மஹிந்த தோல்வியடைந்துவிட்டார், கோட்டாவும் தோல்வியடைந்துவிட்டார்.  பஷிலையம் நியமிக்கப் பார்த்து  இவர்களது தோல்வியை மறைக்கப் பார்க்கின்றனர் என்றார்.