ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது .இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை குடிவரவு அமைச்சர் Alex Hawke அண்மையில் வெளியிட்டிருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு குடியுரிமை விண்ணப்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.
குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால் இதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மிகுந்த சிக்கல்வாய்ந்தவையாக காணப்படுவதால் அவற்றின் பரிசீலனைக்கு அதிக நேரமும் அதிக முயற்சியும் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோருடைய குடியுரிமை விண்ணப்பத்துடன் சேர்ந்து விண்ணப்பிக்கும் 15 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கட்டணம் அறவிடப்படாது எனவும், தனியாக விண்ணப்பிக்கும் பிள்ளைகளுக்கான விண்ணப்ப கட்டணம் 180 டொலர்களிலிருந்து 300 டொலர்களாக அதிகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் Alex Hawke அறிவித்தார்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம் குறைவாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.