அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான ‘கோல்டு கேஸ்’ மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.
கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும், சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என்றார்.
அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal