ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, தங்களின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக முடக்க நினைப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாக விதிக்க திட்டமிடப்பட்டுள்ள விதிகளின் படி, தொண்டு நிறுவனங்கள் அத்துமீறல் அல்லது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அந்நிறுவனங்கள் வரி விலக்கு நன்கொடையினை பெற முடியாது எனப்படுகின்றது.
உதாரணத்திற்கு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் நடைப்பாதையில் நின்று ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக பேசினாலோ, ஒரு டீவிட் செய்தாலோ, மெழுகுவர்த்தி ஏந்தினாலோ கூட புதிய விதிகளின் மூலம் தொண்டு நிறுவனத்தின் பதிவை(Registration) அரசால் நீக்க முடியும் என தொண்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்படி நீக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் வரி விலக்கு நன்கொடை பெறுவது சாத்தியமற்றதாகும்.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் சுமார் 60,000 பதிவுச் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலர்கள் நன்கொடையாக கிடைக்கிறது. அந்த வகையில், இந்த நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குபவர்கள் அத்தொகைக்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. இது தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அவசியமானதாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள விதிகளை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல், கேர் ஆஸ்திரேலியா, ஆக்ஸ்பாம் உள்ளிட்ட 77 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“இது ஜனநாயகத்தில் திகைப்பூட்கின்ற அதிகார அத்துமீறல்,” என Save the Children அமைப்பின் பால் ரொனால்ட்ஸ் தெரிவித்திருக்கிறார்.
இக்கட்டுப்பாடுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தொண்டு நிறுவனங்கள் தலையீட்டை தடுக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள் போர்வையில் செயல்படும் செயற்பாட்டாளர்களை(Activist Organisations) அடையாளம் காண இந்த கட்டுப்பாடுகள் தேவையானவை எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அரசின் உதவிப் பொருளாளர் Michael Sukkar.
“நன்கொடைகள் மற்றும் வரிச் சலுகைகள் மூலம் தொண்டு நிறுவனங்களை ஆஸ்திரேலியர்கள் தொண்டு செயல்பாடுகளுக்காக ஆதரிக்கின்றனர், சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கவோ அல்லது அதில் பங்கேற்கவோ அவர்கள் நன்கொடை வழங்கவில்லை,” என Michael Sukkar குறிப்பிட்டுள்ளார்.