அவுஸ்திரேலியாவின் கொவிட்-19 தடுப்புக் குழு திங்களன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றின் மிகவும் அபாயகரமான டெல்டா மாறுபாடு வெடிப்பால் சிட்னி உள்ளிட்ட பிற இடங்களில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளினால் ஏறக்குறைய 18 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் அல்லது 70 சதவீத மக்கள் பாதிப்பினை தற்சமயம் எதிர்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்களில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்ட நகராகவும் இருக்கும் சிட்னி, வார இறுதியில் இரண்டு வார முடக்கல் நிலைக்கு சென்றுள்ளது.
கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டுடன் தொடர்புடைய 128 கொரோனா நோயாளர்கள் சிட்னியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வட பிராந்தியம், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவிலும் டெல்டா மாறுபாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றுநோய்களின் அதிகரிப்பு சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் முடக்கல்களை தூண்டியுள்ளதுடன் நான்கு மாநிலங்களுக்கான கட்டுப்பாடுகளையும் அதிகரித்துள்ளது.