ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 2 அகதிகள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“இந்த அரசாங்கம் எங்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்வது ஏன்? எங்களுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எங்களால் இனியும் தடுப்பு முகாமில் இருக்க முடியாது,” என உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓர் அகதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் உள்ள நவுரு மற்றும் மனுஸ் தீவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு என சுமார் 90 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் பலர் தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், மேலும் பலர் தொடர்ந்து சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன், அடியெல்ட் பகுதிகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலிலேயே அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

“மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் Refugee Action Collective அமைப்பின் பேச்சாளர் ஐன் ரிண்டோல்.

“மருத்துவ சிகிச்சைக்கு என ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்ட பல அகதிகளுக்கு இதுவரை சிகிச்சை கூட வழங்கப்படவில்லை. நவுரு மற்றும் மனுஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள், ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகளாக தடுப்பில் இருக்கின்றனர். அவர்கள் தடுப்பில் உள்ள ஒவ்வொரு நாளும் அது அவர்களின் மனநிலையை மேலும் மோசமாக்குகிறது. அவர்களுக்கு விடுதலை வேண்டும்,” என ரிண்டோல் குறிப்பிட்டிருக்கிறார்.

கடல் கடந்த தடுப்பு முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோர முயன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.