கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது

எச்.ஐ.வி. நெருக்கடியின்போது நடந்ததைப்போல கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கையிலும் உலகம் தவறு செய்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரசை எதிர் கொள்ளும் நடவடிக்கையை பொறுத்தமட்டில், 1980-களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நெருக்கடியின்போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போதும் செய்கின்றன். எச்.ஐ.வி., எய்ட்ஸ் சிகிச்சையானது வளர்ச்சி அடைந்த நாடுகளில் பரவலாக ஆன பின்னர், குறைவான வருமானம் கொண்ட நாடுகளை சென்றடைய 10 ஆண்டுகள் ஆனது” என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்கனவே பரவலாகி இருக்கிறது, ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போய்ச்சேரவில்லை என்று இவர் ஏற்கனவே விமர்சித்து வருகிறார். கொரோனா தடுப்பூசி ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாரபட்சம் இன்றி அனைவருக்கும் சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இவர் அழைப்பு விடுத்துள்ளார்.