சந்தனக் கடத்தல் வீரப்பனைக் காட்டில் சந்தித்து நிறைய நேர்காணல்கள் செய்தவர் பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம். கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கடத்தப்பட்டபோது, வீரப்பனுடன் பேச்சு நடத்திய அனுபவம் கொண்ட இவர், வீரப்பன் வழக்குகளில் தொடர்புபடுத்தப்பட்டு சிறைக்கும் சென்றவர். என்கவுன்ட்டரில் வீரப்பன் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கழித்து, ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக நூலை எழுதி சமீபத்தில் வெளியிட்டார். சுமார் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூலைத் தற்போது ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். இது குறித்து சிவசுப்பிரமணியத்துடனான உரையாடலிலிருந்து…
வீரப்பன் இறந்து இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் பற்றி இவ்வளவு பெரிய நூல் எழுத என்ன அவசியம் வந்தது?
என்னுடன் பேசிய காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் இதையேதான் கேட்டார்கள். இந்த நூலை அச்சிட நான் அணுகிய பதிப்பகங்களும், இதைத் தொடராக வெளியிட நான் பேசிய பத்திரிகைகளும், “வீரப்பனைப் பற்றி இனி எழுத என்ன இருக்கிறது?” என்றுதான் கேட்டார்கள். நான் வீரப்பனுடன் 8 ஆண்டுகள் தொடர்பில் இருந்திருந்தாலும், ராஜ்குமார் கடத்தலில் என்ன நடந்தது என்று எங்கேயும் இதுவரை சொல்ல முடியவில்லை. உலகத்தில் அத்தனை பேருமே அந்தக் கடத்தலில் வீரப்பனுக்குப் பணம் பரிமாறப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த விவகாரத்தில் தூதுவர்களாகச் செயல்பட்ட அனைவரும் அதை மறுக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதிகூட அதைப் பற்றி கருத்து சொல்லவில்லை. ஆனால், இரண்டு அரசுகளிடமும் பணம் வாங்கியதாக வீரப்பன் சொன்னார். ஆக, மக்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஒருமுறை காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசும்போது சொன்னார்: “சில வருடங்களுக்கு முன் லண்டனில் நடந்த சர்வதேசக் காவல் துறை உயர் அதிகாரிகள் கருத்தரங்குக்கு நம் அதிகாரிகள் சென்றிருந்தார்கள். அங்கே கந்தகார் விமானம் கடத்தல் விவகாரம் உட்பட உலகில் நடந்த மாபெரும் கடத்தல்கள் பற்றிப் பேசப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 28 நாட்களுக்கு நீண்ட ஒரு கடத்தல்தான் உலகிலேயே மிகப் பெரிய கடத்தல் என்றும் பேசியிருக்கிறார்கள். அப்போது நமது தரப்பில் கலந்துகொண்ட உயர் அதிகாரி, தமிழ்நாட்டில் 108 நாட்கள் ராஜ்குமார் கடத்தி வைக்கப்பட்டிருந்ததை விரிவாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, உலக அளவில் நடந்த கடத்தல்களிலேயே பெரிய கடத்தல் இது என்று அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகத்தின் குடகு மலை, தமிழகத்தின் ஒகேனக்கல், பாலக்கோடு தொடங்கி கேரளத்தின் செம்மந்தி மலைக் காடுகள் வரை சுமார் 180 – 250 கிலோமீட்டர் நீள அகலத்துக்கு நடந்தே கடந்து வாழ்ந்த நபர் வீரப்பன். அவரைப் போல் காடுகளை அளந்தவர் யாருமே கிடையாது. அந்தக் காடு எப்படிப்பட்டது, அங்கே மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பல்லுயிர்கள், விலங்குகள், மரங்கள் எப்படி இருந்தன, நீராதாரங்கள் எப்படி என்பதெல்லாம் இந்த நூலின் வழியே கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. இதற்கு வீரப்பன் என்ற மையப்புள்ளி உதவியிருக்கிறது.
நக்கீரன் கோபால், வீரப்பனை வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ் போன்றோரும் வீரப்பனைப் பற்றி புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவற்றிலிருந்து உங்கள் புத்தகம் எவ்விதம் மாறுபடுகிறது?
விஜயகுமார் நூலை நான் படித்தேன். அவர் எங்கெல்லாம் தவறாகச் சொல்கிறார் என்பதை அறிந்து, நான் சரியாக எழுத அந்தப் புத்தகம் எனக்கு உதவியது. கோபால் வெளியிட்ட புத்தகங்கள், பத்திரிகைகளில் வெளியான தொடர்கள் போன்றவற்றில் முழுமையான கள ஆய்வு இல்லை என்பது என் கருத்து. நான் எழுதியிருப்பது முழுக்க முழுக்கக் கள ஆய்வின் அடிப்படையிலானது. உதாரணமாக, வனத் துறை தரப்பில் வாசுதேவன் மூர்த்தி, கர்நாடகத்தில் ஏசிஎஃப் ஆக இருந்தவர். அவருடன் யதார்த்தமாகப் பேசியபோது, வீரப்பன் காடுகள் எப்படி இருந்தன, வீரப்பன் எப்படிப்பட்ட ஆட்களைச் சேர்த்துக்கொண்டார், கர்நாடக, தமிழ்நாட்டு போலீஸாருக்குள், வனத் துறைக்குள் முரண்பாடுகள் எப்படி இருந்தன, போலீஸுக்கும் வனத் துறைக்குமான மோதலில் வீரப்பன் எப்படித் தப்பிச் சென்றார் என்பன பற்றியெல்லாம் விரிவாகச் சொன்னார். சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று, தொடர்புடைய ஆட்களிடம் மூன்று கட்ட விசாரணை மேற்கொண்டு வனத் துறை, வீரப்பன், காவல் துறைத் தரப்புகளில் தரவுகள் சேகரித்தேன். அதை முன்வைத்து, உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவற்றை ஆடியோ, வீடியோக்களாகவும் பதிவுசெய்தேன். இதில்தான் இதுவரை வீரப்பன் பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்களைக் காட்டிலும் யதார்த்தமான உண்மையை வெளியே கொண்டுவர முடிந்திருக்கிறது.
இதற்காக எத்தனை ஊர்களுக்குச் சென்று எத்தனை பேரைச் சந்தித்திருப்பீர்கள்?
என் புத்தகம் நான்கு பாகங்களாக வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் தலா 120-150 பேரின் பேட்டிகள், புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கின்றன. இவர்கள் எல்லோருமே வீரப்பனை நெருக்கமாகப் பார்த்தவர்கள். ஆனால், இது மாதிரி நான்கைந்து மடங்கு ஆட்களை நான் இந்தத் தரவுகளுக்காகப் பார்த்திருக்கிறேன். அதில், “எனக்கு அது தெரியாது; அவரைப் பாருங்கள்; அவனுக்கு அது தெரியாது, இவனைப் பாருங்கள்” என என்னைப் பல இடங்களுக்குப் போகச் சொன்னவர்கள் எக்கச்சக்கம். இதில் ஒரு கண்ணி துண்டிக்கப்பட்டிருந்தால், இதில் ஒரு முக்கியமான தகவல் கிடைக்காமலே போயிருக்கும். சமூகவலைதள யுகத்தில் பொய்யான தகவல்களைச் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களையும் இனம் கண்டு ஒதுக்க வேண்டியிருந்தது.
வீரப்பன், அவரது கூட்டாளிகள், உறவினர்கள் போன்றோரைப் பல முறை நேரில் சந்தித்துப் பேட்டியெடுத்தவர் நீங்கள். அதை வைத்தே புத்தகங்கள் எழுதலாமே? வீரப்பனுடன் தொடர்புடையவர்களைச் சந்தித்துப் புத்தகம் எழுத வேண்டிய அவசியம் என்ன?
வீரப்பன், அவர் கூட்டாளிகள் சார்ந்த விஷயங்களை நான் அறிந்தவரை எழுதியிருந்தால், அது ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கும். வீரப்பன், வனத் துறை, காவல் துறையால் பாதிக்கப்பட்ட பெரியதொரு நிலப்பகுதி உள்ளது. போலீஸ், வீரப்பன் இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதலில், அப்பாவிப் பழங்குடி மக்கள் பலர் இறந்திருக்கிறார்கள். போலீஸ் சுட்டு வீரப்பனின் ஆட்கள் செத்தால், பழங்குடிகள் ஊரைவிட்டே ஓடி ஒளிய வேண்டிய நிலை இருந்தது. வீரப்பன் சுட்டு போலீஸார் இறந்தால், போலீஸார் பழங்குடிகளை அள்ளிச் சென்று சித்ரவதை செய்து என்கவுன்ட்டர் எனும் பெயரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதைப் பொறுப்பாக அணுக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனால்தான், அவர்களிடமிருந்தே இந்தக் கள ஆய்வைச் செய்துள்ளேன். முழுக்க முழுக்க நான் அறியாத தகவல்கள் மக்களிடமிருந்துதான் கிடைத்தன. இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாலே அதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிடுவதில் என்ன சவால் இருந்தது?
இரு மாநில போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை. வீரப்பனின் மனைவி, “என் வீட்டுக்காரர் பத்தி நீங்க எழுதறதுதான் சரியா இருக்கும். சீக்கிரம் எழுதுங்க” என முதலில் ஊக்கப்படுத்தினார். அவரே பின்னர், “இதை நீங்க எழுதக் கூடாது. எழுதினா எனக்கு காப்பிரைட்ஸ் கொடுக்கணும்” எனச் சொல்லிப் பிடிவாதம் காட்டினார். வக்கீல் நோட்டீஸ் வரை சென்றார். “இந்நூலில் உங்களைப் பற்றியோ, உங்கள் கணவரைப் பற்றியோ எதுவும் எழுதவில்லை. கர்நாடக, தமிழ்நாடு அரசானது குற்றவாளியாகக் கருதி, 184 வழக்குகள் பதிவுசெய்த வீரப்பன் என்ற நபரைப் பற்றித்தான் எழுதுகிறேன்” என அந்தப் பிரச்சினையை முடித்தேன். நான் பணிபுரிந்த ‘நக்கீரன்’ பத்திரிகையிலிருந்தும், ‘நக்கீரன் காப்பிரைட்ஸ் பெற்ற புகைப்படங்கள் எதுவும் பிரசுரிக்கவோ, ஆசிரியரைப் பற்றியோ, நிறுவனத்தைப் பற்றியோ எழுதக் கூடாது’ என்று நோட்டீஸ் வந்தது. அதையும் கருத்தில்கொண்டுதான் இந்த நூலை எழுதி முடித்து வெளியிட்டிருக்கிறேன்.
(விரிவான பேட்டி ஞாயிறு வெளியாகும் ‘காமதேனு’ டிஜிட்டல் வார இதழில்…)