‘‘காலனியாதிக்க மனநிலை’’- வளர்ந்த நாடுகள் மீது உலக சுகாதார நிறுவனம் சாடல்

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுவது காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளர்ந்த நாடுகளிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் வழங்குவதற்காக கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இந்த கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை 132 நாடுகளுக்கு 9 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமானதால், தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்தது.

சில வளர்ந்த நாடுகள் கரோனா தடுப்பூசிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக கோவேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளதாவது:

இது தவிர மேலும் சில வளர்ந்த நாடுகள் கரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதாகவும், மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றும் வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால் தங்கள் உபயோகத்திற்கு மட்டுமே தடுப்பூசியை அவை பயன்படுத்துகின்றன. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை சரியாக பாதுகாக்கும் நல்ல கட்டமைப்பு இல்லை என வளர்ந்த நாடுகள் கூறுகின்றன. அவர்களின் இந்த கவலை காலனியாதிக்க மனநிலையை காட்டுகிறது.

வளர்ந்து வரும் நாடுகளிலும் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவும், அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தவும் நல்ல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை காரணமாக கூறாமல் தயவு செய்து கரோனா தடுப்பூசியை தாருங்கள் என வளர்ந்த நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.