“கோபிகா-தருணிகாவுக்கு பதிலாக Jane-Sally என்றிருந்தால் அரசு விசா தந்திருக்கும்”

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா-நடேஸ் தம்பதியரின் இரு மகள்களான கோபிகா மற்றும் தருணிகாவுக்கு Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை வேறுவிதமாக நடத்தியிருக்கும் என முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.

ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசு முனைந்திருக்காது என சாடியிருந்தார்.

ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசு முனைந்திருக்காது என சாடியிருந்தார்.

இதுஒருபுறமிருக்க பெர்த்தில் சமூகத் தடுப்பில்(Community detention) வாழ்ந்துவரும் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 3 மாதங்களுக்கான bridging விசா நேற்றையதினம் குடிவரவு அமைச்சர் Alex Hawke-ஆல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி மகள் தருணிகாவுக்கு bridging விசா வழங்கப்படவில்லை.

குறித்த bridging விசாவின்கீழ் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவரும், அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதிக்கு சென்று வாழமுடியும்.

ஆனால் தருணிகா தொடர்ந்தும் சமூக தடுப்பு உத்தரவின்கீழே உள்ளதால் அவர் பெர்த்தைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது. இதனால் முழுக்குடும்பமும் பெர்த் சமூகத்தடுப்பிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இக்குடும்பத்தினரின் சட்டத்தரணி Carina Ford தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் bridging விசா வழங்கிவிட்டு தருணிகாவுக்கு மட்டும் விசா வழங்காததற்கு என்ன காரணம் என்பதை குடிவரவு அமைச்சர் விளக்கவேண்டும் எனவும் Carina Ford கூறியுள்ளார்.

பிரியா குடும்பம் அவர்கள் முன்னர் வாழ்ந்த Biloela-இல் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் பின்னணியில், அமைச்சரின் நடவடிக்கையால் இக்குடும்பம் அங்கு செல்லமுடியாமல் பெர்த்திலேயே இருக்கவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக Carina Ford குறிப்பிட்டார்.
நான்கு வயது தருணிகாவுக்கு குருதித்தொற்று ஏற்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து குடிவரவு அமைச்சரின் விசேட அனுமதியின்பேரில் முழுக்குடும்பமும் பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.