அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டவிரோதமான ஒன்றுகூடலில் அங்கம் வகித்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் விசேட குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனைக்குள்ளான துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்
ஜனாதிபதி இத்தகைய பொதுமன்னிப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய குறித்த வழக்கை நடத்திய நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும்.
பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் சட்டமா அதிபர் மற்றம் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர்கள் இருவரும் அதுகுறித்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே இந்த பொதுமன்னிப்பானது குறித்த வழக்கை விசாரணைசெய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக வழங்கப்பட்டதா? என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது.
ஆகவே இதுவிடயத்தில் மேற்படி தரப்பினரால் அறிக்கையோ, அபிப்பிராயமோ அல்லது பரிந்துரைகளோ முன்வைக்கப்பட்டதா என்பதையும் அவ்வாறெனில் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டதா? அல்லது வழங்கவேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டதா? என்பதை வெளிப்படுத்துமாறுகோரி ஜனாதிபதிக்கு நாம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறோம்.
இவ்வாறான பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டாலும், அது எப்போதும்; சட்டரீதியாகவே அணுகப்பட வேண்டும். அத்தகைய அதிகாரம் தன்னிச்சையான முறையிலோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையிலோ பயன்படுத்தப்படக்கூடாது.
கடந்த காலத்திலும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையில் கைதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படாமல், சில கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
அத்தகைய சந்தர்ப்பங்களிலும் சட்டத்தரணிகள் சங்கம் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆகவே இதுகுறித்து ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.
அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எவ்வடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, இந்தப் பொதுமன்னிப்பை வழ்ஙகும்போது கவனத்தில்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரின் வழக்குகளிலிருந்து துமிந்த சில்வாவின் வழங்கு விலக்களிக்கப்படுவதற்கான காரணம், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை கோரப்பட்டதா? ஆமெனில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதியமைச்சரிடம் பரிந்துரைகள் கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன? ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்றே கடிதம் மூலம் கோரியிருக்கிறோம்.
இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கவில்லை எனின், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாகும். அது சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்கும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகாண்பதற்குமே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.