“அவள் ஒரு ஆஸ்திரேலிய பெண்… பெற்றோர் கிடையாது. அன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், உறவுகள் அறிந்தவள் இல்லை. ஒரு இந்தியப் பையன், இவள் மீது காட்டும் அன்பு, காதலாய் மாறுகிறது. அவள் அந்தக் காதலைப் பூரணமாய் உணரும் அந்தத் தருணத்தில்… ஒரு பாடல் வேண்டும் ” இயக்குநர் சொல்லி முடிக்கிறார். சரியாக எட்டு நிமிடங்கள் கரைகிறது. அந்த கிடாரில் அற்புதமாய் ஒரு ட்யூன் உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அது முழுப் பாடலாய் உருவாகிறது. ராஜா… இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஆங்கிலத் திரைப்படம் . அந்த ஆங்கிலப் பாடல்… வேற லெவல்
லவ் & லவ் ஒன்லி ( LOVE & LOVE ONLY ) என்ற இந்த ஆங்கிலப்படத்தின் இயக்குநர், ஆஸ்திரேலிய வாழ் தமிழரான ஜூலியன் கரிகாலன். இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எம்.பி.ஏ படிக்கப் போகும் ஹீரோ கிருஷ்ணா, அங்கு ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பார்ட் டைம் வேலைக்கு சேர்கிறார். சின்ன வயதிலேயே பெற்றோர் பிரிந்துவிட, தனியே வாழ்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியப் பெண் ஸ்டேசியும் அங்கு வேலை செய்து வருகிறார். நட்பாகத் தொடங்கும் உறவு, காதலாகிறது. கலாச்சார வேற்றுமகளைக் கலைந்து, இருவரின் வாழ்வின் பிரச்சினைகளைக் கடந்து ஒன்று சேர்ந்தார்களா என்பதை… காதல் நிரம்பிய காட்சிகளோடு, காதல் வழியும் ராஜாவின் இசை வழியே சொல்கிறது லவ் & லவ் ஒன்லி.
தமிழில் இரண்டாம் உலகம் படத்தில் துணை நடிகராக வரும் ரோஹித் கலியா ஹீரோவாக நடித்துள்ளார். ஆஸ்திரேலிய படங்களில் துணை நடிகையாக வரும் ஜியார்ஜியா நிக்கோலஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இளையராஜாவின் இசைக்கு அடுத்து, படத்தின் பெரிய பலமாக நிக்கோலஸின் நடிப்பையும், காதல் வசனங்களையும் சொல்லலாம்.
” பிடித்த ஒரு விஷயம் கிடைக்காமல், பிடிக்காத ஆயிரம் விஷயம் கிடைத்தாலும்… அது எல்லோமே வீண் தான்…”, ” அந்நியம் என்பதாலே எதையும் ஒதுக்கிட முடியாது. சமயங்களில், அந்நியமான சில விஷயங்களில் கூட ஒரு நெருக்கம் இருக்கும்…”,” ஆண்கள் மட்டும் தான் இப்படியா ? அல்லது ஆண் இனமே இப்படித் தானா ? ” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஹீரோவும் ஹீரோயினும் ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் காட்சியில், உணவு வேற்றுமையின் வழி கலாச்சார வேற்றுமைகளை சொல்லுமிடத்திலும், நாயகி தன் வலி மிகுந்த பால்ய கால வாழ்வை சொல்லும் காட்சியிலும் இளையராஜா தன் க்ளாசிக் டச்சைக் கொடுத்திருக்கிறார். காட்சிகள் பேசாத பல உணர்வுகளை பின்னணி இசை உணர்த்துகிறது.
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட முக்கிய காரணம்… இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாது என்பதால் தான். இது ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் புது முயற்சி என்பதால் தான் . 75 ரூபாய் கட்டி இந்தப் படத்தை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம் .
ஆஸ்திரேலியாவின் சிறைத்துறையில் கைதிகள் குறித்த ஆவணப்படங்களை இயக்கும் வேலை ஜூலியனுடையது. சினிமா மீதான ஆர்வத்தால், படமெடுக்க முடிவு செய்கிறார். படத்தின் பட்ஜெட் லட்சங்களில் தான். படத்தின் மொத்த குழு 10 பேர் தான். அதில் பெரும்பாலும் ஜூலியனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் பங்கேற்று வருகிறது. படத்தின் மூலம் நிச்சயம் பொருளாதார வெற்றியும் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஜூலியன்.
இளையராஜா இந்தப் படத்திற்குள் எப்படி வந்தார் ?
” ஒரு முறை இளையராஜா அவர்களின் பேட்டியில், இளைஞர்களின் புது முயற்சிகளுக்கு நான் முழு ஒத்துழைப்புத் தருவேன் என்று சொல்லியிருந்தார். என் படத்தை எடுத்து முடித்ததும், அவரிடம் கொண்டு வந்து காட்டினேன். படம் பார்த்தார். ஒரு இரண்டு மணி நேரம் ஒன்றுமே சொல்லாமல் இருந்தார். பின்பு, ” எனக்குப் படம் பிடிச்சிருக்கு… அதவிட முக்கியமா உன்னுடைய இந்தப் புது முயற்சிக்கு நான் ஏதாவது செய்யணும். நிச்சயம் பண்றேன்னு” ஒத்துக்கிட்டு இந்தப் படத்திற்கான இசை வேலைகளை செய்து கொடுத்தார்.”
அந்த ஆங்கிலப் பாடல் எப்படி உருவானது?
” சிச்சுவேஷன் சொல்லி சில நிமிடங்களிலேயே ராஜா சார் ட்யூன் பிடித்து விட்டார். அதை யாராவது ஆஸ்திரேலியே பெண்ணே பாடினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். ஆஸ்திரேலியாவில் விளம்பரம் கொடுத்து சில குரல்களை தேர்ந்தெடுத்தேன். அதில் ராஜா சார், ரேச்செல் லியகார் என்ற இந்தப் பெண்ணின் குரலைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் பெண்ணிற்கு டனல் விஷன் என்ற பார்வை குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜா சாருக்கு இன்னும் கூட இந்த விஷயம் தெரியாது. அந்தப் பெண் அற்புதமாய் பாடியிருப்பதாக ராஜா சாரே சொன்னார்.”
சினிமா எடுக்கும் முயற்சியில் கோடம்பாக்கத்தில் வாழ்வை அடமானம் வைத்து போராடும் எத்தனையோ உதவி இயக்குநர்களுக்கான ஒரு மாற்று வழியை ஜூலியன் திறந்துவிட்டுள்ளார். அவரின் இந்த புதுமையான முயற்சிக்காகவும், இளையராஜாவின் இசைக்காகவும்… நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
Website: http://www.loveandloveonly.movie/