உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிச் சிறுமிக்கான சிகிச்சை நிறைவு

குருதி தொற்று காரணமாக கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் இருந்து ஆஸ்திரேலிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதிகளின் குழந்தையான தருணிகாவுக்கு சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த பிரியா- நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை  நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களது இரு குழந்தைகளும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரியா- நடேசலிங்கத்தின் இளைய மகள் தருணிகா கடந்த ஜுன் 7ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

இதற்கிடையில், பிரியா – நடேசன் குடும்பத்தவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஆஸ்திரேலியா எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அவர்களது வழக்கு முடிவு வெளிவரும் வரை  பெர்த் நகரில் தற்காலிகமாக வசிக்க ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அனுமதி வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.