ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கிலோ மீட்டர்கள் அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை நடத்தப்பட்ட விதம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் தற்காலிகமாக வாழ அந்நாட்டு அரசு அனுமதியிருக்கிறது. அதே சமயம், அவர்களின் எதிர்காலம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே உள்ளது எனக் கூறப்படுகின்றது.
இந்த சூழலில் தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவது குறித்த விவாதங்களும் ஆஸ்திரேலிய அரச மட்டத்தில் நடந்தன.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தங்கள் நாட்டில் மீள்குடியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தங்களை கம்போடியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டிருக்கிறது. அத்துடன் இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நியூசிலாந்தின் சலுகையையும் பரிசீலணையில் உள்ளது.
கடந்த நவம்பர் 2016 யில் கையெழுத்தான ஆஸ்திரேலியா-அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதே போல், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-கம்போடியா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை
கம்போடியாவில் மீன் குடியமர்த்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 50 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் ஆஸ்திரேலியாவின் இத்திட்டம் தோல்வியிலேயே முடிந்தது.
கடந்த பல ஆண்டுகளாக அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கையாளும் ஆஸ்திரேலிய அரசு, வரும் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கும் கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கும் 2 பில்லியன் டாலர்கள் செலவு செய்ய ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் தஞ்சமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் இந்த போக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல மனித உயிர்களை பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியா மீதான உலக நன்மதிப்பை இது சீரழிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.