ஆஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் தற்போது ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன?
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா பெற காத்திருக்கும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இத்தடுப்பில் வைக்கப்படுகின்றனர். இத்தடுப்பில் சம்பந்தப்பட்ட அகதி தடுப்பு முகாம் அல்லது கடல் கடந்த தடுப்பிற்கு பதிலாக பிற சுதந்திரமான நபர்களைப் போல வீட்டில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் அகதிகள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் இருக்கும் மாநிலத்தை விட்டு பிற மாநிலத்திற்கு பயணிக்கவோ அல்லது தாங்கள் விரும்பும் இடத்துக்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“(இந்த காலகட்டத்தில்) அவர்களுக்கு எந்த விசாவும் வழங்கப்பட மாட்டாது. வேலை செய்வதற்கோ கல்வி கற்கவோ இந்த அகதிகளுக்கு அனுமதி கிடையாது. குறைந்த அளவிலான நிதியுதவியுடன் அவர்கள்
தங்களது தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் மேற்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்காக செயல்படும் மையத்தின் பொது மேலாளர் Joanna Josephs.
இந்த திட்டம் ஆஸ்திரேலிய உள்துறையால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 3000 கி.மீ. அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பிலிருந்து தமிழ் அகதி குடும்பம் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தற்காலிகமான ஒரு விடுவிப்பே எனக் கூறப்படும் நிலையில், அவர்களின் எதிர்காலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனப்படுகின்றது.
இந்த நிலையில், “அக்குடும்பத்தின் குடிவரவு அந்தஸ்தில் எந்த மாற்றமும் இருக்காது,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்.
Eelamurasu Australia Online News Portal