அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும்.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், சந்திப்பு பிற்போடப்பட்டமை குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கத்திலிருந்தே செய்திகள் வௌிப்படுத்தப்பட்டன.

ஜனாதிபதித் தேர்தலையடுத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர், 69 இலட்சம் பெரும்பான்மை மக்களின் வாக்குளைப் பெற்று வெற்றியீட்​டிய அதே உந்துதலுடன் தன்பயணத்தைத் தொடர்ந்த ஜனாதிபதி, சிங்கள பெரும்பான்மை மக்களின் மனங்களில் ‘சிங்கம்’ என இடம்​பிடித்துக்கொண்டார்.

‘நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசிவது போல்’,  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், சிறுபான்மையினரின் பக்கமாகக் கடைக்கண் பார்வை மட்டுமே பார்க்கப்பட்டது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், நிவாரணக் கொடுப்பனவுகள் என்று எதுவாக இருந்தாலும் அவையெல்லாம், தென்னிலங்கையை மையப்படுத்தியே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிறுபான்மை இனங்கள், பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே பலருடைய குற்றச்சாட்டுகளாகும்.

பல்லினங்கள் வாழும் நாட்டில், சகலருக்கும் பொதுவானவராகவே ஜனாதிபதி இருத்தல் வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் முன்னிலையில் போட்டியிட்டவர்களும் வெற்றியீட்டியவர்களும், சிறுபான்மையின மக்களை ஓரங்கட்டிப் பார்க்கவில்லை.

அரசியல் கொள்கை கோட்பாடுகளின் பிரகாரமும் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தும், அவற்றுக்கு ஆதரவானவர்களும் இருக்கலாம்; எதிரானவர்களும் இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு ஒரு​வரே ஜனாதிபதியாவார்.

கடந்த கால ஜனாதிபதிகள், அவ்வாறான பேதங்களை ஓரளவுக்கேனும் மறந்து செயற்பட்டனர். ஆனால், அவ்வாறான தோற்றப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காண்பிக்கவில்லை. இல்லையேல், சுற்றியிருக்கும் பரிவாரங்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

என்னதான் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருந்தாலும் ‘ஜனாதிபதி’ என்றொருவரால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணமுடியாது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கூறல், ஆளும் கட்சியின் ஒ‌ற்றுமை, பாராளுமன்றத்தின் அங்கிகாரம், மக்களின் ஆதரவு போன்றவை எல்லாம், ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கின்றன.

இவற்றுக்கு ஒருபடி மேலேசெல்ல​வேண்டுமாயின், எதிர்க்கட்சியினரையும் அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, அரசியல் சுய இலாபத்துக்காக இல்லாது, நாடு, மக்கள், எதிர்கால சந்ததி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, தீர்மானங்கள் எட்டப்படுமாயின், ஜனாதிபதி தனித்து நிற்கவேண்டியதில்லை.

விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காது, தான்தோன்றித்தனமாக, தன்னைச் சுற்றியிருக்கும் சிறு குழுவின் ஆலோசனைகளைப் பெற்று, அவ்வாறானவர்களை மட்டுமே திருப்திப்படுத்துவதற்கான முடிவுகள், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியதை தவிர்க்கவே முடியாது.

“பயங்காரவாதிகளைப் போல, கொரோனாவையும் நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்” என வீராப்பு வசனங்களைப் பேசி, தனிவழியில் சென்று,  திக்குமுக்காட வேண்டிய நிலைமைக்கு  அரசாங்கம் வந்துவிட்டது.

நானென்ன செய்வதெனக் கூறி, ஒரு நாட்டின் தலைவன் கைகளை விரித்துவிடமுடியாது; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாளியாக இருக்கவேண்டும். அதற்குத் தேவையான வகையில், நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொள்ள​வேண்டும். எதிர்காலம் தொடர்பில் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து, முடிவுகளை எடுக்கவேண்டும்.

ஜனாதிபதி, பெரும்பான்மை வாக்குகளால் வென்றிருப்பதை மறுதலிப்பதற்கு இல்லை; அந்தச் சூட்டோடு சூடாக, தங்களுக்கு ஆதரவளிக்காத தரப்பு மக்கள் பிரதிநிதிகளை  அழைத்துப் பேசி, அம்மக்களின் பிரச்சினைகளையும்  செவிசாய்த்திருந்தால், அது சிம்மாசனத்தை மென்மேலும் அலங்கரித்திருக்கும்.

‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்ற நாமம் இல்லாது ஒழிந்துவிடுமோ என்றோர் அச்சம், ஜனாதிபதியிடம் குடிகொண்டிருக்கலாம். அதனால், தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பை, இதுவரை காலமும் தவிர்த்துவந்திருக்கலாம்.

நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற பிரச்சினையென்றால், இனப்பிரச்சினையை மட்டு​மே கூறமுடியும். அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான எந்தவொரு செயற்பாடும், புதிய ஜனாதிபதியின் கீழ் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று (16) ஏற்பாடாகியிருந்தது. எனினும், திகதி, நேரம் குறிக்கப்படாது அச்சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் த.தே.கூவுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாகப் பதியப்பட்டிருக்கும்.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்பு 2020 டிசெம்பர் அனுப்பி வைத்ததாகவும் அதன்பின்னர்,   2021 பெப்ரவரியில், நிபுணர் குழுவை சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்த கூட்டமைப்பு, இதை முன்கொண்டு செல்வது சம்பந்தமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்படுமென  கூறியது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிவிப்பை பார்க்குமிடத்து, இப்போதைய நிலைமையில் இது தேவைதானா என, உண்மையில் நினைக்கவைத்துவிட்டது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை பலமுனைகளிலும் முன்னகர்த்தி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பிலும் கட்டாயம் கதைத்தே ஆகவேண்டும். ஏனெனில், பயணக்கட்டுப்பாடுகள் எனக் கூறிக்கூறியே, தங்களுக்குத் தேவையானவற்றை இவ்வரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுவிடும். ஆனால், அரசியலமைப்பு யோசனையை எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றமுடியாது, அதற்கென சில படிமுறைகள் உள்ளன. எனவே, இப்போதைக்கு பேசவேண்டிய அதிமுக்கியமான விடயமாக அரசியலமைப்பு திருத்தம் இருந்துவிடமுடியாது.

கொரோனா தொற்றுக்காலத்தில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும், பயணக்கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொறிமுறைகளை உருவாக்குதல்  உள்ளிட்டவை தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசப்போகின்றோமென கூட்டமைப்பு அறிவித்திருக்குமாயின், ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான  தரப்பும் மெளமாய் இருந்திருக்கும். ஆனால், ‘விடயம்’ இனப்பிரச்சினைத் தீர்வோடு பயணப்பட்டதால், ‘முதல் சந்​திப்பு’  வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

‘புலி முத்திரை’ குத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், ஜனாதிபதி சந்தித்தித்தால், “புலிகளின் கால்களில் சரணடைந்த சிங்கம்” எனப் பிரசாரம் செய்வதற்கு, இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் தென்னிலங்கை தரப்பின் வாய்களுக்கு, ‘அவல்’ போட்டதாய் அமைந்திருந்திருக்கும். அதேபோல, புலிகளின் போர்வைக்குள் இருந்து அரசியல் செய்யும் தமிழ்த்தரப்புகள், “சரணாகதி ​அரசியல் செய்யும் கூட்டமைப்பு” என பேரண்ட பிரசாரத்தில் குதித்திருப்பர்.

ஆக, சந்திப்புத் தொடர்பில், முன்தம்பட்டம் அடிக்காமல் மௌனம் காத்திருந்தால், கூட்டமைப்பின் அரசியலுக்கு அது அழகுசேர்த்திருக்கும்.  மக்களுக்கு அதிரடியாய்த் தேவையான  விடயங்களை, ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு சென்று, முடிந்தவற்றைப் பெற்றிருக்கலாம்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியை கைவிடுமாறு கூறவில்லை; ஆனால், இடம், பொருள், ஏவல் அறிந்து, அரசியல் காய்களை நகர்த்தியிருக்க வேண்டும். அதில், கூட்டமைப்பு ‘கூத்தாடி’விட்டது. முன்னரே கசியவிட்ட செய்தியால், கடும்போக்கு சிங்களத் தரப்புகள், ‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்பதை நினைவூட்டி, சந்திப்பை வேண்டுமென்றே பிற்போடும் அளவுக்கு, உள் அழுத்தங்களைக் கொடுத்திருந்திருக்கலாம்.

இல்லையேல், கூட்டமைப்புக்காக ஒதுக்கியிருந்த அந்த நேரத்தில், அவசரமாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை நடத்தவேண்டி இருந்திருக்கும். ஆக, ஜனாதிபதியின் நாட்குறிப்பை மாற்றக்கூடிய அதியுச்ச அதிகாரம், அவரிடம் மட்டுமே உள்ளதென்பதை மறுதலிக்க முடியாது.

மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (ஜூன் 16) நிகழவிருந்த அதிசயம், இறுதி செய்யப்படாது அஸ்தமனமாகி, மீண்டுமோர் உதயத்துக்கான திகதியோ நேரமோ குறிக்கப்படாது, விடப்பட்டுள்ளது எனக்கூறுவதில் தப்பேதும் இல்லை.

சின்னையா செல்வராஜ்