தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பத்து நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் புதிய விவசாய விசாவின்கீழ் ஆஸ்திரேலியா வந்து இங்குள்ள விவசாயிகளிடம் பணிபுரிய முடியும்.
முன்னதாக பிரிட்டன் நாட்டவர்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட இப்புதிய விவசாய விசாவில் தற்போது இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, Brunei மற்றும் Laos ஆகிய 10 நாடுகள் இணைத்துக்கொள்ளப்படுகின்றன.
பிரிட்டனிலிருந்து working holiday விசாவில் வருபவர்கள்(backpackers) தமது விசாவை நீட்டிக்க வேண்டுமெனில் ஆஸ்திரேலியாவிலுள்ள விவசாய நிலங்களில் வேலைசெய்யவேண்டுமென்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்படவுள்ளதை அடுத்து இப்புதிய விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா-ஐக்கிய இராச்சியம் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ் working holiday விசாவிற்கான நிபந்தனை தளர்வு கொண்டுவரப்படுகிறது.
இதையடுத்து ஆஸ்திரேலிய விவசாய நிலங்களில் வேலைசெய்யும் சுமார் 10 ஆயிரம் பிரிட்டிஷ் வேலையாட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் அரசு இப்புதிய விவசாய விசாவை சுமார் 10 நாடுகளுக்கு அறிமுகம் செய்கிறது.
புதிய விவசாய விசாவின்கீழ் பணியாளர் ஒருவர் 3 வருடங்களுக்கு ஆஸ்திரேலியா வரமுடியும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 மாதங்கள் விவசாயநிலங்களில் பணிபுரிந்துவிட்டு மிகுதி 3 மாதங்கள் தமது சொந்தநாட்டுக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அரசின் இப்புதிய அறிவிப்பை வரவேற்றுள்ள தேசிய விவசாய சம்மேளனம், குறித்த விவசாய விசாவை அறிமுகம் செய்யுமாறு நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாகவும் அதை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலிய விவசாய நிலங்களில் வேலைசெய்த backpackers-இன் எண்ணிக்கை 160,000 இலிருந்து 40 ஆயிரத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், இப்புதிய விசாவின் கீழ் தென்கிழக்காசியாவிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவிர்த்திசெய்ய முடியும் எனத் தான் நம்புவதாகவும் தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் Fiona Simson தெரிவித்தார்.
அதேநேரம் இப்புதிய விசா தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள பணியாளர்களை மையப்படுத்தியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் இவர்கள் சுரண்டலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.