சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்ட காரணத்தால் யாராவது காவல் துறையால் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக இரண்டு சட்டத்தரணிகளையும் நியமித்திருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம் காவல் துறையைக்கொண்டு கைது செய்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்து, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டுவந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தார்மிக மற்றும் சட்டவிரோத செயலாகும்.
நாட்டின் அரசியலமைப்பில் நாட்டு மக்களுக்கு கருத்துச்சுதந்திர உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த உரிமையை மீறும் நடவடிக்கையாகவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை காண்கின்றோம். கருத்துச்சுதந்திரத்தை இல்லாமலாக்கி மக்களை அடக்கி வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிக்க முடியாத நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் அரசாங்கத்தின் இந்த ஊடக அடக்குமுறைக்கு ஆளாகுபவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பித்திருக்கின்றது. அதனால் யாராவது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.