ராஜபக்ஷவினருடன் செய்துகொண்டுள்ள அரசியல் ‘டீல் ‘ காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகின்றார். அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்தாலும் அரசாங்கத்தை பலப்படுத்தும் பணியையே முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
ரணில் – ராஜபக் ஷ அரசியல் டீல் குறித்து எமக்கு புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த தனது கருத்தை தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர், அதற்கான ஆதாரங்கள் எம்மிடத்தில் உள்ளது, அதேபோல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போதே ரணிலை நாடாளுமன்றத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்வது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
அதுமட்டுமல்ல தேர்தலில் தோல்வியை சந்தித்த எந்தவொரு நபரையும் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது என்பதை 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், இறுதி தேர்தலின் போதும் கூறியிருந்தார். இறுதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும் தோல்வியை சந்தித்துள்ளார். எனவே இவ்வாறு யோசனைகளை நிறைவேற்றிவிட்டு வெட்கமில்லாது அவர் எவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வருவார் என்பதை தனக்குத்தானே அவர் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க எப்போதும் அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துக்கொள்பவர், அவர் ஆட்சியில் இருந்த வேளையிலும் எதிர்க்கட்சி உறுபினர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எமக்கு நன்றாக தெரியும்.
இப்போதும் அவர் எதிர்க்கட்சி பக்கம் அமர்ந்துகொண்டு அரசாங்கத்தை பலப்படுத்தும் வேலையையே செய்யப்போகின்றார். ஆகவே ராஜபக்ஷவுடன் செய்து கொண்டுள்ள டீல் அரசியலில் ரணில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றார் என்றார்.