கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் என ஏராளமான திரைப்பிரபலங்கள் நிதியுதவி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி.
Eelamurasu Australia Online News Portal