கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு முன்னர், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்பதை நம்பக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதன் முதற்கட்ட நடவடிக்கையாக அச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டால், அவர் கூறுகின்ற கருத்து நம்பக்கூடியதாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அமர்வின்போது, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் சில சரத்துக்களை மறுபரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.

அதற்கு 5 மாதங்கள் கழித்து, இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பயங்கரவாதத்தடைச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் என்று நீதியமைச்சர் கூறுகின்றார் என்று அம்பிகா சற்குணநாதன் அவரது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்