பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குக

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன.

நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன

நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பிரியா-நடேஸ் குடும்பம் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சூழல் பிள்ளைகளுக்கு ஏற்றதல்ல எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் நேற்று அவரது நான்காவது பிறந்ததினமாகும்.

குருதித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தருணிகாவுடன் தாயார் பிரியா மட்டுமே பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும் சகோதரியும் கிறிஸ்மஸ் தீவிலேயே உள்ளனர்.

இந்தப்பின்னணியில் தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.

இக்குடும்பம் தொடர்பிலான இறுதிமுடிவை குடிவரவு அமைச்சர் Alex Hawke விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்தகுடும்பம் தடுப்புமுகாமுக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர் வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதிக்குப் பொறுப்பான Nationals நாடாளுமன்ற உறுப்பினர் Ken O’Dowd இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு குடிவரவு அமைச்சர் Alex Hawke-இடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அதேபோன்று லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் Trent Zimmerman-உம் குடிவரவு அமைச்சர் Alex Hawke-ஐத் தொடர்புகொண்டு இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிப்பதற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ABC-இடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர மேலும் பல அரசியல்வாதிகளும் முக்கிய பிரதிநிதிகளும் இக்குடும்பத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர்.

ஆனால் மீண்டும் படகுகள் வருவதற்கு வழியேற்படுத்திக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ள Acting பிரதமர் Michael McCormack, அகதிகள் படகுகள் கடலில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் Trent Zimmerman நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கவில்லை எனவும் அந்த வலி தனக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுஒருபுறமிருக்க பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்திருந்தபோதிலும் இக்குடும்பம் அதற்கு தகுதிபெறவில்லை என்பதால் மூன்றாவது நாடொன்றில் இவர்கள் குடியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என உள்துறை அமைச்சர் Karen Andrews மறுத்திருந்தார்.