ஆஷஸ் தொடருக்கு உதவாது: வாகன் எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பின்னர், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
இந்திய தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.
முதல் போட்டியில் ஒருநாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது  இன்னிங்சில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது இங்கிலாந்து எப்போதும் க்ரீன் ஆடுகளத்தை தயார் செய்யும். க்ரீன் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இதை பயன்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெறும்.
தற்போதும் மலிவான அதே யுக்தியை பின்பற்றினால், ஆஷஸ் தொடருக்கு உதவாகு என மைக்கேல் வாகன் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘லார்ட்ஸ் போட்டியின்போது மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம். ஆனால் ஒரே தவறை தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் செய்வது ஒரு வெளிப்படையான டேக்டிக்கல் தவறு. ஆடுகளம் அதிக அளவில் டர்ன் ஆவதற்கும், பந்து கிரிப் அவதற்கும் உகந்ததாக இல்லை. எட்ஜ்பாஸ்டனில் வெப்பம் அதிகமாக இருந்து ஆடுகளம் டிரை-யாக இருக்கும்போது வேரியேசன் தேவை.
இங்கிலாந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் பந்து வீசினார்கள். ஜேக் லீச்சை எடுத்திருந்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவியிருக்கும். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இதுபோன்ற தவறை செய்யாது என நம்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிராக க்ரீன் ஆடுகளம் அமைத்து, அதில் ஒன்றிரண்டு மலிவான வெற்றி பெற்றால், அது ஆஷஸ் தொடருக்கு உதவியாக இருக்கும் என நான் நம்பவில்லை. இங்கிலாந்து அணி சிறந்த டெஸ்ட் ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
கடந்த சில வாரங்களாக டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமாக இருந்தது. இங்கிலாந்து சிறந்த வகையில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி கொள்ள இங்கிலாந்து அணி நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.