ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – அதனை இழந்தால் பெரும் பாதிப்பு

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி இழக்கும் டொலரின் பெறுமதி 300 ருபாயாக அதிகரிக்கும்

ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்லுகையை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்காக 2017 இல் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு வரிகள் இன்றி இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் இதன் காரணமாக இலங்கையின் ஆடைத்தொழிற்துறையும் மீன்பிடித்தொழில்துறையும் வளர்ச்சியடைந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவகாரமொன்று எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என நாங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் ஆடைதொழில்துறை ஆபத்தான நிலையில் உள்ளது,எஸ்பிரஸ்பேர்ள் கப்பல் மூழ்கியுள்ளமை காரணமாக மீன்பிடித்துறைக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது இதன் காரணமாக எங்களின் வெளிநாட்டு வருமானம் குறைவடைந்துள்ளது,என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பங்களாதேசிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளது,எங்கள் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு குறைவடைந்தமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தேயிலையும் ஆடைத்தொழில்துறையும் மாத்திரம் வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி இழக்கும் டொலரின் பெறுமதி 300 ருபாயாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை அரசியல்மயப்படுத்தக்கூடாது அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்;துள்ளார்.

தற்போது மக்கள் சுமக்கும் சுமைக்கு மேல் வேறு சுமைகளை சுமத்தவேண்டாம்,நாட்டை அழிக்கவேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.