‘இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!”

”பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!” என்கிறார் பழ.நெடுமாறன்.

மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ”தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் ‘தமிழகம்’ என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன?

அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசியல் சட்டப்படி சரி!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவருகிறார் மூத்த தமிழ்த் தேசியவாதியும், ‘தமிழர் தேசிய முன்னணி’யின் தலைவருமான பழ.நெடுமாறன்.

அவரிடம் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினேன்…

”இன்றைய தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய அரசியல் கட்சிகளில், நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?”

தி.மு.க - அ.தி.மு.க

தி.மு.க – அ.தி.மு.க

”தேர்தல் அரசியல் என்பதே சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிட்டது. 1967-ல் அமைக்கப்பட்ட தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்தது; முதலாளித்துவக் கட்சியான சுதந்திரா கட்சியும் இருந்தது. 1967-லிருந்தே இந்திய தேசியத்துடன் திராவிடத் தேர்தல் கட்சிகள் சமரசம் செய்துகொண்டன. இன்றைய தேதி வரையிலும் திராவிட தேர்தல் அரசியல் கட்சிகள் காங்கிரஸ், ஜனதா, பா.ஜ.க என மாறி மாறி அகில இந்தியக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துதானே தேர்தலைச் சந்தித்துவருகின்றன! காங்கிரஸ் கட்சி தனது சமய சார்பற்றத் தன்மையைக் கைவிட்டு, மிதவாத இந்துத்துவாக் கட்சியாகவும், பா.ஜ.க தீவிரவாத இந்துத்துவாக் கட்சியாகவும் திகழ்கின்றன. ஆனால் பல்வேறு மாநிலக் கட்சிகள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்து மேற்கண்ட இரு கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து தேர்தலை கேலிக் கூத்தாக்கிவிட்டன. இந்தப் போக்கின் வளர்ச்சி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதில் போய் முடிந்திருக்கிறது.

கொள்கை, கோட்பாடற்ற சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டால் தமிழ்த் தேசியம் நீர்த்துப்போகும். அதனால்தான் நாங்கள் யாரையுமே இன்றைய சூழலில் ஆதரிக்க முடியாமல், ஒதுங்கி நிற்கிறோம். நாங்கள் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கும் வலிமை பெறும் வரை இந்த நிலை நீடிக்கும்.”

”இன்றைய தமிழக அரசியலில், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கக்கூடிய கட்சியாக நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள்?”

”தமிழ்த் தேசியத்தை 40 ஆண்டு காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறவர்கள் நாங்கள்தான். ‘தமிழர் தேசிய இயக்கம்’ என்று முதலில் பெயர் வைத்தோம். 2002-ல் என்னைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தபோது, எங்கள் இயக்கத்துக்கும் தடை விதித்தார்கள். இன்றைய தேதிவரையிலும் அந்தத் தடை நீடித்துவருகிறது. இதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு 19 வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. எனவேதான் ‘தமிழர் தேசிய முன்னணி’ என்ற பெயரில், 70 அமைப்புகளை ஒன்றிணைத்து எங்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்.

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசத் துரோக சட்டம் போன்ற பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையிலிருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் சரியான முறையில் அடையாளம் கண்டு முதன்முதலில் அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்தது.

மு.க.ஸ்டாலின் - சீமான்

மு.க.ஸ்டாலின் – சீமான்

ஆனாலும் காவிரிப் பிரச்னை, பெரியாறுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும், தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும், தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உடனே பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம்.

இந்த வழக்கில், 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், மீதமிருந்தவர்களில் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் தொடர்ச்சியாகப் போராடி அவர்களது உயிரையும் காப்பாற்றியிருக்கிறோம். இன்றைக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிவருகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதற்கு முன்னோடிகளாக நாங்கள் இன்று வரையிலும் திகழ்ந்துவருகிறோம். ஆனாலும் தமிழ்த் தேசியம் பேசுவோர் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே எங்களது நோக்கம்!”

‘திராவிடம் என்பதே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற பரப்புரை இப்போது அதிகரித்துவருகிறதே?”

”இந்திய தேசியத்தைத்தான் முன்னிறுத்தி நாங்கள் எதிர்த்துவருகிறோம். ஏனெனில், மாநிலங்களின் உரிமைகளையெல்லாம் பறித்து, மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு, வெறும் ஊராட்சி நிலைக்கு மாநிலங்களைத் தள்ளிவிட்டார்கள். இதற்குக் காரணமான இந்திய தேசியத்தைத்தான் நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

மாறாக, திராவிடத் தேர்தல் கட்சிகள் இந்திய தேசியத்தோடு சமரசம் செய்துகொண்டு, கைகோத்துச் செல்ல ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘இந்து தேசியம்’ என்பது மொழிவழி தேசியத்தை அடியோடு அழித்து, மாநிலங்களையும் இல்லாமல் செய்து ஒரே ஆட்சியை மட்டும் இந்தியா முழுமைக்கும் நிலை நிறுத்தும் நோக்கம்கொண்டது. இதைப் புரிந்துகொண்டாலும்கூட பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதன்மையான எதிரி இந்தியமே!”

பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

”திராவிடம் என்ற சொல்லாடலே ஆரியத்துக்கு எதிரானதுதான் என்று திராவிடக் கட்சியினர் விளக்கம் தருகிறார்களே..?”

”சங்க நூல்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் திராவிடம் என்ற சொல்லாடல் ஓரிடத்தில்கூட இடம்பெறவில்லை. பக்தி இலக்கிய காலத்திலும் ஆரியத்துக்கு எதிரான சரியான சொல்லாடலாக ‘தமிழன்’ என்ற சொல்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று 7-ம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்..! எனவே, ஆரியன் என்பதற்கான சரியான எதிர்ப்பதம் ‘தமிழன்’தான்!

இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களின் மொழிகளும் சம்ஸ்கிருத ஊடுருவலால் கலப்பு மொழிகளாகித் திரிந்துவிட்டன. இந்தநிலையில், நம் தமிழ் மொழி மட்டும்தான் அதற்கு அடிபணியாமல் தனது தனித்தன்மையைக் காத்துக்கொண்டிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர் காலத்திலிருந்தே வடசொல் கலப்பை நாம் எதிர்த்துவருகிறோம்!”