பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த சமயத்தில் தவறவிட்ட பந்து உதட்டை கிழித்துவிட்டதால் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில், ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை போல, பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) டி 20 லீக் போட்டிகள், நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம், பாகிஸ்தானில் ஆரம்பமான 6 ஆவது பிஎஸ்எல் சீசன், கொரோனா தொற்றின் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகின்றது.
இதில், பிஎஸ்எல் அணிகளில் ஒன்றான லாகூர் குவலேண்டர்ஸ்ஸிற்காக (Lahore Qalandars), ஆஸ்திரேலிய வீரர் பென் டங்க் (Ben Dunk) ஆடி வருகிறார். அந்த அணியின் விக்கெட் கீப்பரான பென் டங்க், பேட்டிங்கிலும் சிறப்பான பங்கை ஆற்றி வருகிறார். இதனிடையே, கேட்ச் பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், தன்னிடம் வந்த பந்தை பென் டங்க் தவற விட, அவரது முகத்தில் பட்ட பந்து, அவரது உதடுப் பகுதியைக் கிழித்துள்ளது.
அதிகமாக, ரத்தம் வழிந்த நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏழு தையல்களும் போடப்பட்டுள்ளது. காயம் சற்று அதிகமாக உள்ள காரணத்தினால், அவர் தொடக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பென் டங்கின் உடல்நிலை பற்றி பேசிய லாகூர் அணியின் தலைமை செயலாளர் சமீம் ராணா, “அவர் நன்றாக உடல்நலம் தேறி வருகிறார். உடல்நிலை சரியானால் அவர் முதல் போட்டியில் கூட கலந்து கொள்வார். இல்லையெனில் அடுத்த சில நாட்களுக்கு பிறகு களமிறங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.