அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள்.

ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டத்தை நேற்று முன்தினம் மாலையிலிருந்து முன்னெடுத்து வருகிறது.

இரவு பகலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தப் போராட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

கடுமையான மழை மற்றும் குளிருக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஜேர்மன் நாட்டு மக்களும் பங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 4.00 மணி முதல் பிராங்போர்ட் விமான நிலையத்தைச் சூழ்ந்து போராட்டத்தை நடத்துவதற்கும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

பிராங்போர்ட் விமான நிலையத்தின் ஊடாகவே குறிப்பிட்ட 20 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சுமார் 25 இலங்கைத் தமிழ் அகதிகளைப் பலத்த எதிர்ப்புகளின் நடுவிலும் ஜேர்மனி பலவந்தமாக நாடு கடத்தியிருந்தது. விமான நிலையத்தை சுற்றிவளைத்து தமிழர்கள் போராட்டம் நடத்திய போதிலும், இரகசியமாக அவர்கள் விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதேவேளையில், பிரேமன் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் எடுத்த முயற்சியில் இன்று நாடு கடத்தப்படவிருந்த செல்லத்துரை என்ற தமிழ் அகதி நேற்று மாலை விடுதலை செய்ப்பட்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.