கோவிட் தொற்றுக்காக நாட்டில் பயணத்தடை விதிக்கப்படுவதாக புதிய சொல்லொன்று பாவிக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது முடக்கமும் அல்ல, இதுவொரு ஊரடங்கு சட்டமும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலே இப்போது இருக்கின்ற அபாயகரமான சூழலை புறந்தள்ளி விட்டு புதிய விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இன்று நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் கூட இந்த நாட்டிலே இன்று இருக்கின்ற மிகப் பிரதானமானது கோவிட். இந்த கோவிட் என்கின்ற கொள்ளை நோயினால் இந்த நாடு மிகப் பெரிய அதாள பாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மண்சரிவு, இன்னொரு பக்கம் மழை வெள்ளம். அதிலே மக்கள் இறந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
இன்னொரு புறத்தில் நாட்டில் வாழும் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உணவு மற்றும் அவர்கள் வாழ்வதற்கான வசதிகள் எதுவும் செய்யப்படாத சூழல் நிலவுகிறது. இது மிகவும் ஒரு ஆபத்தான விடயம்.
கோவிட் தொற்றுக்காக நாட்டில் பயணத்தடை விதிக்கப்படுவதாக புதிய சொல்லொன்று பாவிக்கப்படுகிறது. இது லொக்டவுனும் அல்ல, இதுவொரு ஊரடங்கு சட்டமும் அல்ல.
செல்வாக்குள்ளவர்கள் பயணம் செய்யக் கூடிய வகையில் தான் அந்த பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.