விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton அறிவித்தார்.
கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இவர்களில் இருவர் குறித்த அறிவிப்பு நேற்றையதினம் வெளியாகியிருந்தது.
ஏனைய 9 பேரில் 3 சிறுவர்களும் ஒரு Arcare Maidstone முதியோர் பராமரிப்பு பணியாளரும் அடங்குகின்றனர்.
அதேநேரம் புதிதாக தொற்றுக்கண்டவர்களில் நால்வருக்கு ஏற்பட்டிருப்பது அதிக ஆபத்தான Delta வகை கொரோனா வைரஸ் தொற்றாகும்.
இதையடுத்து திரிபடைந்த Delta வகை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மெல்பனில் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் ஆராய்ச்சி தொடர்வதாகவும் Infectious diseases expert Sharon Lewin தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விடுதி ஊடாக அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டவர்கள் ஊடாக இவ்வைரஸ் நாட்டுக்குள் நுழைந்திருக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுஒருபுறமிருக்க மெல்பனில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ள கடந்த 2 வாரங்களில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் கோவிட் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக testing commander Jeroen Weimar தெரிவித்தார்.
மேலும் தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 5800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவர்களில் கிட்டத்தட்ட 1000 ஆயிரம் பேர் 13வது நாளன்று மேற்கொள்ளப்பட்ட கோவிட் சோதனையில் தொற்று இல்லையென்று நிரூபணமானதையடுத்து தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டுவிட்டதாகவும் Jeroen Weimar தெரிவித்தார்.
விக்டோரியாவில் தொற்றுக் கண்டவர்கள் சென்றுவந்த இடங்களின் விவரங்களை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத்துறையினர் குறிப்பிட்ட நேரங்களில் குறித்த இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.