கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் கூறியதாவது: ‘குட்லக் சகி’ படம் ஓடிடிக்கு செல்வதாக பரவும் தகவல் உண்மையில்லை. விரைவில் அப்டேட் வெளியிடுவோம். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பாதுக்காப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.