‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதி என நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குனர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கு ராஜி என்ற பயங்கரவாதி பெண் வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது போல காட்டியிருந்தார்கள்.
தி பேமிலி மேன் 2 போஸ்டர்
ராஜி, மிக கவனமாக கையாளப்பட வேண்டிய கதாபாத்திரம். நான் அதை புரிந்துகொண்டு நடித்தேன். ஈழ தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்தரித்திருந்தார்கள். இலங்கை தமிழர்கள் லட்சக்கணக்கில் வீடு வாசல்களை இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளும் உள்ளன.
யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கதையும், காட்சிகளும் கற்பனையாக சொல்லப்பட்டு இருந்தன. இலங்கை போரில் மரணம் அடைந்த தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அதை இந்த தொடர் நிறைவு செய்யும். இவ்வாறு சமந்தா கூறியிருக்கிறார்.
Re