ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது, வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும் தடுப்பூசிகளில் போலியான தடுப்பூசிகளை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தொற்றுநோய்கள் குறித்த நிபுணரும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
நாட்டில் ஆறு இலட்சம் பேருக்கு ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி குறித்தும், வியாபாரிகளினூடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எடுக்கும் நடவடிக்கை சாத்தியமா என்பது குறித்தும் தெளிவுபடுத்துகையில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் தடுப்பூசிகளை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தவறிழைத்துள்ளது. குறிப்பாக முதலில் எமக்கு கிடைத்த ஓக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்தியிருக்க வேண்டும், அதற்கான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அதனை மீறி அரசியல் நோக்கங்களில் செயற்பட ஆரம்பித்ததன் விளைவாக இப்போது ஓக்ஸ்போர்ட் ;அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையொன்று காணப்படுகின்றது.
அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை நினைத்தால் போல் வியாபார சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாது, எவ்வாறேனும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வோம் என கூறிக்கொண்டுள்ள அரச அதிகாரிகளுக்கு இது விளங்கவில்லை, எங்கிருந்தாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார் என பேசுகின்ற அதிகாரிகளுக்கு கூறிக்கொள்வது ஒன்றுதான். வியாபாரிகளிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் போது அது போலியான தடுப்பூசியாக இருக்கலாம். இதனை சீரம் நிறுவனம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது
என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை எடுக்கக்கூடாது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை முறையாக தொடர்புகொண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal