இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பினெய் மெனாஷே இனத்தவரை, யூதர்களாக அங்கீகரிப்பதாக, இஸ்ரேலைச் சேர்ந்த யூதத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின், இந்த இன மக்கள், இஸ்ரேலுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து இதுவரை 2500-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 160 யூதர்கள் விமானம் மூலம் இஸ்ரேல் புறப்பட்டனர். இந்த விமானம் நேற்று இஸ்ரேலின் பென்குரியான் விமான நிலையத்தை சென்றடைந்தது.
முன்னதாக இந்தியாவிலிருந்து 275 யூதர்களை இஸ்ரேலுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 38 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 38 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 115 பேரை இந்தியாவிலேயே விட்டுவிட்டு 160 பேர் மட்டும் இஸ்ரேலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Eelamurasu Australia Online News Portal