யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு

( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . )

தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே, தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதற்கு யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை சிறந்த உதாரணம் ஆகும். 1958 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், யாழ் நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டைமை இளைஞர்களை கையில் ஆயுதம் ஏந்த தூண்டியது.

யாழ்ப்பணத்தைப் பொறுத்தவரையில் முதல் நூலகம் 1842 இல் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. 1894ம் ஆண்டு சிலோன் ஒப்சோவர் பத்திரிகையில் யாழ் பொது நூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைக்கிறார் ஆசிரியர். யாழ்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்பாணத்து அறிஞர்களும் ஒன்று சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சோவர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றபட்டது என்ற செய்தி காணப்படுகிறது

ஆனாலும் அது பெரு வளர்ச்சி பெற்றதாக இல்லை. 1933 இலேயே இன்றைய நூலகத்திற்கான முதல் விதை போடப்பட்டது. சிறிய அளவில் யழ்ப்பாணத்தில் இயங்கிய நூலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. யாழ் நகரபிதா, வண. லோங் அடிகள், இந்திய தூதுவராலய செயலர், அமெரிக்கதூதுவர், பிரித்தானியத் தூதுவர் ஆகியோரால் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

யாழ்ப்பாணம் கண்டிராத பெரும் களியாட்ட விழாக்கள், பரிசு சீட்டு விற்பனை போன்ற பலவற்றின் மூலம் மக்களிடமிருந்து நூலகம் கட்டுவதற்கான பணம் சிறிது சிறிதாக திரட்டப் பட்டது. நூலகம் அமைப்பதற்கான திட்டங்களை நூலகத்தின் தந்தை என்று தமிழகத்தில் அறியப்பட்ட எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளிக்க, கட்டுமானப் பணிகளை சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் கே.எஸ்.நரசிம்மன் ஏற்றார். பல பேரின் கூட்டுழைபினாலும் யாழ்ப்பாண மக்களின் பங்களிப்பினாலும் உருபெற்ற நூலகம் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றது

யாழ் நூலகம் ஆசியாவின் மிகப் பெரும் நூலகம். தமிழர்களின் கல்வி வளத்தின் ஆதரமாகவும் தமிழரின் அடையாளமாகவும் உருபெற்று நின்றது. 11.10.1959 இல் பொதுமக்கள் பாவனைக்காக யாழ் மேயர் அல்பிரட் துரையப்பவினால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வியலோடு நூலகம் ஒன்றிக்க தொடங்கியது. யாழ்ப்பணத்தில் ஊருக்கு ஊர் இயங்கிய வாசிப்பு மையங்கள், சனசமூக நிலையங்கள் வாசிக சாலைகள் என்பவற்றின் மையப் புள்ளியாக யாழ் பொதுசன நூலகம் உருப்பெறலாயிற்று.

ஏறாத்தாழ 98 வீதம் எழுத்தறிவு உள்ளதான யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இந்த வாசிகசாலைகளும் நூலகங்களும் உந்து சக்தியாக இருந்தன. யாழ்ப்பணத்தின் பெரும்பாலான வீடுகளில் பத்திரிகை வாங்கும் பழக்கம் இருந்தது. இளைஞர்கள் கூடும் இடங்களாக வாசிப்பு நிலையங்களும், நூலகங்களும் மாறியிருந்தன. சிங்கள இனவாதிகள் தமிழருகெதிரான வன்முறையினைக் கட்டவிழ்த்த பொழுதுகளில் சிங்களவர் கண்களில் தமிழரின் அறிவு வளர்ச்சி உறுத்திக் கொண்டிருந்தது,

சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர்மீது இருந்த வெறுப்பு இனாவாதத் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் தருணம் பார்த்திருந்தனர். 1981 மாவட்ட சபைத் தேர்தலையொட்டிய நாட்கள் தமிழர் கல்வி ஆதாரத்தை அழிப்பதற்கான நாளாக தீர்மானிக்கப்பட்டது. 1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பொலிச்சர் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும், கொழும்பில் இருந்து கொண்டுவரப் பட்ட சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்பாணதில் உள்ள புத்தகக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது, தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டன. 1981 மே 31 நள்ளிரவை எட்டிக் கொண்டிருந்தது யாழ்ப்பாணத்தின் முதல் தினசரிப் பத்திரிகையான ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திலும் தீ வைக்கப் பட்டது.
ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று தனது அதிகாரத்தின் மூலம் பலாலி இராணுவ முகாமை விஸ்தரித்துக்கொண்டிருந்த வேளையில், யாழ். பொது நூலகமும் யாழ். நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டன.

நூலகத்துக்கு எதிரே சில அடி தூரத்தில்தான் யாழ் தலைமைக் பொலிஸ் நிலையம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்புக்கு என கொழும்பிலிருந்து வந்திருந்த பொலிஸ் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கமும் நூலகத்துக்கு எதிரேதான் இருக்கிறது. இவ்வகையான பாதுகாப்பு உள்ள நூலகம் தீப்பிடித்து எரிந்தது என்றால் ஆச்சரியம்தான்!

இரவு 10 மணிக்கு நூலகத்திற்குள் நுழைந்த சிங்கள இனவெறியர்கள் காவலாளியைத் துரத்திவிட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தி உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்கு பெற்றோல் ஊற்றி எரித்தனர்.

இவ்வளவுமாகச் சேர்ந்து 97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது!

தீ யாழ்ப்பாண நகரமெங்கும் கொழுந்துவிட்டெரிந்த அந்த நள்ளிரவில் யாழ் நூலகத்தின் மேற்கு மூலையில் முதல் தீ வைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து நூலகம் முழுவதும் தீ வைக்கப் பட்டது. யாழ்ப்பாண நூலகத்தில் வைக்கப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. யாழ்ப்பாண நூலகத் தாய் துடிதுடித்து எரிவதைப் பார்த்த மக்கள் துடித்தனர். வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாதவாறு பொலிசார் தடுத்தனர். தகவல் அறிந்து வந்த யாழ் மாநகராட்சி ஆணையரை இடைவழியில் இரணுவத்தினர் தடுத்து வீட்டுக்கு திரும்புமாறு பணித்தனர்.

யாழ் நூலகத்திற்கு அருகிலேயே யாழ்ப்பாணம் பொலிஸ் தலமை அலுவலகம் இருந்தது. அங்கிருந்தும் பெற்றொல் குண்டுகள் வீசப்பட்டதாக அருகில் வீடுகளில் இருந்தவர்கள் சொன்னார்கள். கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் முற்றவெளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான சிங்களக் குண்டர்களே இதனைச் செய்தார்கள் என்று அடுத்தடுத்து நடந்த விசாரணைகளில் தெரியவந்தது .

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் நெருக்கத்துக்குரியவர்களான இரண்டு அமைச்சர்கள் நூலகத்திற்கு அருகில் உள்ள சுபாசஸ் விருந்தினர் விடுதில் தங்கியிருந்தனர். 1983 தமிழர் படுகொலையை முன்னின்று செய்த சிறில் மத்தியூவும். தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி கலவரங்களைத் தூண்டிய காமினி திசாநாயக்கவுமே அந்த இரு அமைச்சர்களாகும். இவர்களின் ஏற்பாட்டிலேயே சிங்கள குண்டர்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப் பட்டனர். இவர்கள் இருவரும்தான் யாழ் நூலக எரிப்புக்கு காரணம் என்பதைப் பின்னாளில் ஜனாதிபதியான பிரேமதாச ஒப்புக்கொண்டார் .
யாழ் நூலகம் எரிப்பு குறித்து தமிழர்களின் குற்றச்சாட்டுக்கிடையே ஜனாதிபதி பிரேமதாசா கூறியது என்ன?

“”வடக்கு-கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்கு பிரதான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981-இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் இது ஒரு கறை படிந்த – துயரமான சம்பவமாகும்.

நாடாளுமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை நாம் கொண்டு வந்தபோது – அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றபோது – காமினி எதிர்த்தார். தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார்.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் சதிநாச வேலைகள் இடம்பெற்ற பின்னர், ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நிலையம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுகளால் நீதியைப் பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள்” என்பதாகும்.

இதற்கு ஒருபடி மேலே சென்று ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.நவாஸ் கூறுகையில், “”தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக விளங்கிய யாழ் நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்ரதாரியாக இருந்த காமினி திசநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

காவல்துறைத் தலைவர் மற்றும் பிரிகேடியர் வீரதுங்கா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பண்பாட்டின் வைப்பகமாக உருவான யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 97 ஆயிரம் சிறப்பு வாய்ந்த நூல்கள் எரிந்து சாம்பலாயின. உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி என்று பெயரெடுத்த ஹிட்லர் கூட இங்கிலாந்து சென்று தாக்கும் தனது விமானப் படையினருக்கு, “ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மீது குண்டு போடாதீர்கள்’ என்று எச்சரித்ததாகத் தகவல்கள் உண்டு. அதே போன்று, “ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தைத் தாக்காதீர்கள்’ என்று பிரிட்டன் விமானப் படைப்பிரிவுக்கும் அறிவுறுத்தப் பட்டதாகவும் சொல்வார்கள்.

ஆனால் ஜெயவர்த்தனாவின் சீடன் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்பார்வையில், தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகத்தைத் தகர்க்க வேண்டும் என்ற வெறியில், தீ மூட்டி எரித்தார்கள்.

யாழ் பொது நூலக எரிப்பு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரிகாவும் கடும் கண்டனம் தெரிவித்து, யாழ் மக்களின் மனங்களை வெல்ல “புத்தமும் செங்கல்லும்’ என்று கோஷம் வைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய பொது நூலகமாக விளங்கிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டமை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.

1920 ஆம் ஆண்டு சிங்கள தமிழ் மக்கள் பிரித்தானியரை வெளியேற்றுவதற்காக இணைந்து உருவாக்கிய இலங்கைத் தேசிய இயக்கத்தின் தலைவராக சேர்.பொன்.அருணாச்சலம் பதவிவகித்தார். ஆனால் தேசிய இயக்கத்தில் சிங்கள இனவாத செயற்பாடு இருப்பதாக குற்றம்சுமத்தி அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய அருணாச்சலம், 1921 இல் தமிழர் மகாசபையை உருவாக்கினார். அன்று ஆரம்பித்த இனமுரண்பாடு 1981 ஆம் ஆண்டு யாழ். பொது நூலக எரிப்பு வரை நீடித்தது.

1984இல் எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையிலேயே நினைவிடமாக இருக்க மீதிப் பகுதியில் நூலகம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன் பின்னர் சண்டைக் களமாக போராளிகளின் பதுங்கு குழியாக பின்னர் இராணுவதினரின் உயர்பாதுகாப்பு பிரதேசமாக என்று நூலகம் போராட்டதில் பல்வேறு பாத்திரங்களைப் பெறலாயிற்று.

இப்போது சர்வதேசக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் இலங்கை அரசு கட்டிட்யிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவத்ற்கு உதவின.

பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர். இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது .

இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை. அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின் சமாதியாகவே இருகிறது. இப்போது மீளவும் கட்டப்பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே. முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை. பெருமபாலான பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம் தனித்தே இருகிறது. அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளன.

30 ஆண்டுகால அகிம்சைப் பேராராட்டத்தின் தோல்வி 1983 இல் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போராட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான கோரிக்கையை ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றனர்.