ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலிய வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கர், “ஒரு வேலையை பெற்று எங்களது தேவைகளை நாங்களே பார்த்துக் கொள்வதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்திருக்கிறோம்,” என்கிறார்.
சில நேரங்களில் வேலை கிடைப்பது என்பது பெரும் சிரமத்திற்கு உரியதாக உள்ளது. இந்த இடத்தில் தான் அரசு முக்கிய பங்காற்றும் நிலையில் உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், 671 மில்லியன் டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கை என மேற்கொண்டுள்ள அறிவிப்பு மூலம் புதிதாக தற்காலிக விசாக்களில் வரும் குடியேறிகள் நல உதவிகளைப் பெறுவது சிரமமான ஒன்றாக மாறியுள்ளதாக அவர் தி கார்டியன் ஊடகத்தின் கருத்துக்கட்டுரையில் கூறியுள்ளார்.
அத்துடன், ஜனவரி 1,2022 முதல் புதிதாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் உரிமை பெறும் குடியேறிகள், தங்களுக்கு அரசின் நல உதவிகளைப் பெற 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இந்தப் பெருந்தொற்று சூழலுக்கு இடையே, தனிமைப்படுத்தல் மையங்களில் நம்மைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர் என ஈழத்தமிழ் அகதியான சங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.