கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றைத் தயாரித்து அதனைப் பகிரங்கப்படுத்துவதுடன் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதுகுறித்து தமக்கு அறியத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
பல்வேறு நெருக்கடிகள் மற்றும் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவலை முற்றாக இல்லாதொழித்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் நீங்கள் அனைவரும் முன்னெடுத்துவரும் பணிகளைப் பெரிதும் வரவேற்பதுடன் பாராட்டுகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கீழ்மட்ட சுகாதாரப்பணியாளர்கள் தொடக்கம் மேல்மட்ட சுகாதாரப்பணியாளர்கள் வரை அனைவரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக அண்மைக்காலத்தில் அஸ்ரா செனேகா, ஸ்புட்னிக் மற்றும் சைனோபாம் ஆகிய தடுப்பூசிகள் இலங்கை அரசாங்கத்தினால் தருவிக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்தத் தடுப்பூசி வாங்கலின் போது நியாயமான செயற்திட்டம் மற்றும் வெளிப்படையான தகவல் வழங்கல் என்பன பின்பற்றப்படவில்லை என்று பல்வேறு சுகாதாரக் கட்டமைப்புக்களும் வேறு சில தொழிற்சங்கங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ளன.
இந்தத் தடுப்பூசி வழங்கலின்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிப்பழக வேண்டிய நிலையிலிருப்பவர்கள் மற்றும் அதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக வேண்டிய அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே தடுப்பூசி வாங்கலின் போது உயர் பதவிகள் அல்லது வேறு அடிப்படைகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடாது. மாறாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நேரடியான ஒத்துழைப்பை வழங்கும் முன்னரங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவும் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக முறையான செயற்திட்டமொன்று பின்பற்றப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம்.
எனவே இதுவிடயத்தில் முறையான செயற்திட்டமொன்றைத் தயாரித்து அதனைப் பகிரங்கப்படுத்துவதுடன் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறியத்தரவேண்டும். 1996 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 21 ஆவது பிரிவின் பிரகாரமே இந்த அறிவிப்பை விடுக்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.