இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்

பள்ளியில் தனக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்றும், தனது நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை தான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ – மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவித்ததாக தெரிவித்திருந்தார்.
கவுரி கிஷன்
நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் கவுரி. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.