அமெரிக்காவின் டெஸ்லா முதல் ஜெர்மனியின் டெய்ம்லர் வரை, மின்சார கார் தயாரிக்கும் பல நிறுவனங்கள், மின்சார லாரிகளையும் விரைவில் சாலைக்கு கொண்டுவரும் மும்முரத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் சார்ஜ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், வித்தியாசமான மின்சார சரக்கு வாகனமொன்றை அண்மையில் அறிவித்துள்ளது.
இதை ஏன், பார்ப்பதற்கு பெட்டி போல வடிவமைத்தனர் என்பது பலருக்கு புதிராகவே உள்ளது. என்றாலும், இந்த வடிவமைப்புக்கு பின்னால், சில முக்கியமான தொழில்நுட்ப புதுமைகள் இருப்பதாக மட்டும், இப்போதைக்கு சார்ஜ் விளக்கம் அளித்திருக்கிறது.
இலகுரக உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சார்ஜ் மின் வாகனம், 3.5 டன் முதல் 26 டன் வரை, பல அளவுகளில் வரவிருக்கிறது. இந்த சரக்கு வாகனங்களின் கட்டமைப்பில், ஒரு சிறப்பு என்னவெனில், ஒரே ஒரு நபர், நான்கு மணி நேரத்தில், முழு வாகனத்தையும் ‘அசெம்பிள்’ செய்துவிட முடியும்! இதனால், 10 தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு ஆண்டிற்கு, 10 ஆயிரம் மின் சரக்கு வாகனங்களை தயாரிக்க முடியும் என, பலரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது சார்ஜ்.
மின்சாரத்தின் மூலம், 160 கி.மீ., துாரமும், பயணத் தொலைவை அதிகரிக்கும், இன்னொரு தொழில்நுட்பத்தால் மேலும், 645 கி.மீ., துாரமும் சார்ஜ் வாகனங்கள் பயணிக்குமாம். ஆனால், அது என்ன தொழில்நுட்பம் என்பதை சார்ஜ் தெரிவிக்கவில்லை.
இன்று லாரிகள் தயாரிக்கப்படும் விதமே, தவறு என, சார்ஜ் சாடுகிறது. ‘நம் சுற்றுசூழலை சுத்தமாக, அமைதியாக, பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் அதன் தயாரிப்பு முதல் சாலையில் பயணிப்பது வரை சார்ஜ் வாகனம் செயல்படும்’ என, அந்நிறுவனத்தின் தலைவரான டெனிஸ் ஸ்வெர்ட்லோவ் அறிவித்திருக்கிறார்.
புகைப்படத்திலிருப்பது போன்ற சார்ஜ் வாகனம் ஒன்று, ஏற்கனவே மின் வாகனங்களுக்கான பந்தயத்தை நடத்தும், ‘பார்முலா இ’ அமைப்புக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது