சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை

சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இதன் உரிமையாளர் ஜிம்மி லாய். இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன அரசுக்கு எதிராக நடந்த சட்டவிரோதப் போராட்டங்களை ஒருங்கிணைத்து மற்றும் அதில் பங்கேற்ற குற்றச்சாட்டில் ஜிம்மி லாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஜிம்மி லாய்க்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் ஹாங்காங் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஜிம்மி லாய்க்கு எதிரான மற்றொரு வழக்கின் இறுதி விசாரணை ஹாங்காங் கோர்ட்டில் நேற்று நடந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜிம்மி லாய்க்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஏற்கனவே ஒரு வழக்கில் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையையும் சேர்த்து ஜிம்மி லாய் மொத்தமாக 20 மாதங்கள் சிறையில் கழிப்பார் என நீதிபதி குறிப்பிட்டார்.