கொரோனா நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் ஆகும்

கொரோனா நோயாளிகளில் பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பல மாதங்கள் அவர்களுக்கு சுவாசப்பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.

கொரோனா நோயாளிகளுக்கு நீண்ட கால அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு குறைந்தபட்சம் 3 மாத காலத்துக்கும், சில நோயாளிகளுக்கு மேலும் கூடுதல் காலத்துக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதும், இதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வு தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கதிரியக்கவியல் (ரேடியா லஜி) என்ற ஆய்வு இதழில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி குறித்து கட்டுரையாளர்களில் ஒருவரான ஷெபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜிம் வைல்ட் கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளில் பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு பல மாதங்கள் அவர்களுக்கு சுவாசப்பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் அவர்களுடைய நுரையீரல் எந்தவித பாதிப்புமின்றி செயல்படுவது போல முடிவுகள் வந்தாலும், அவர்களுக்கு சுவாசப்பிரச்சினை இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த பாதிப்புள்ள நோயாளிகளை ஹைப்பர்போலரைஸ்டு ஜெனான், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்தபோதுதான், அவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், அது ரத்த ஓட்டம் ஆக்சிஜன் பெறுவதை தடை செய்வதும் தெரிய வந்தது.

அதே நேரம் இந்த ஆய்வு என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத மற்றும் நீண்ட நுரையீரல் பாதிப்பு புகார் தெரிவித்த கொரோனா நோயாளிகளிடம் மட்டும் நடத்தப்பட்டதாகும்.

அந்த வகையில் இது ஆரம்ப கால கண்டுபிடிப்பாகவே கருத முடியும். இந்த பாதிப்பு அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ஏற்படுமா? குணம் அடைய எவ்வளவு நாட்கள் ஆகும்? என்பதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வு அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.