டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி (வயது 62), ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் சமீபத்தில் கூறினார். ஆனால் ஆன்டிகுவா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும், ஆன்டிகுவா போலீசார் மெகுல் சோக்கியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அங்கிருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசில் சிக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுபற்றி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெகுல் சோக்சி தப்பிச் செல்ல முயன்றதால், ஆன்டிகுவா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்குகளை வலுப்படுத்தும். அத்துடன் மெகுல் சோக்சி விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என்ற நம்பிக்கையும் அளித்துள்ளது.
தனக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதித்திட்டத்தின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறி உள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.