ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை

20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படவுள்ளது.

;கட்சியின் அரசியல் ; உயர்பீடம் நியமித்த, சிரேஷ்ட பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட்டின் தலைமையிலான மூவர் கொண்ட ஒழுக்காற்றுகுழு அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து விசாரிக்க தீர்மானித்துள்ளது .

;நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமகவே இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் மிக விரைவில் குறித்த விசாரணைகள் இடம்பெறும் எனவும், ஒழுக்காற்றுக்குழுவின் தலைவரும் அ.இ.ம.கா. சிரேஷ்ட பிரதித் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த புத்தளம், அனுராதபுரம் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ; எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருமே, முன்னர் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கும் கட்சி நிலைப்பாட்டை மீறி ஆதரவளித்தனர்.

அப்போது அவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவில்லை. மாற்றாக, கட்சி உயர் பீடம் ஒழுக்காற்று குழுவொன்றினை நியமித்தது. அதன் தலைவராக நானே நியமிக்கப்பட்டேன்.

இதனையடுத்து, 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில், தமது பக்க நியாயங்களை எழுத்து மூலம் குறித்த இரு எம்.பி.க்களிடமும் ஒழுக்காற்று குழு வினவியது. இதனையடுத்து, அவ்விருவரும் அந்த விளக்கத்தினை அளிக்க 5 மாதங்கள் கால அவகாசம் கோரினர். அதற்கும் நாம் ஜனநாயக ரீதியில் பரிசீலித்து அனுமதியளித்தோம். இவ்வாறான நிலையில் எமது இறுதி அறிவித்தல் பிரகாரம் அவர்கள் தமது பக்க விளக்கங்களை எழுத்து மூலம் தற்போது அனுப்பியுள்ளனர். கடந்த மாதம் அவை கிடைத்தன. நோன்பு காலப்பகுதியில் விசாரணைகளை நடாத்துவது சாத்தியமில்லாமல் போனது. எனவே மிக விரைவில், அவ்விளக்கத்துக்கமைய அவ்விருவரையும் கட்சியின் தலைமையகத்துக்கு அழைத்து விசாரிக்கவுள்ளோம். அதன் பின்னர் அது குறித்த ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்தை கட்சியின் அரசியல் உயர் பீடத்துக்கு வழங்குவோம்.’ என தெரிவித்தார்.