சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரசை ஒழிக்க உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.
எனினும் உலகளாவிய தடுப்பூசி வினியோகம் இன்னும் இறுக்கமாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கே உலகின் பெரும்பகுதி போராடி வருகிறது.
அதேவேளையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் வழங்கின.
அதன்படி இரு நாடுகளிலும் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 12 வயது சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்களது தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிடமும் வேலை செய்வதாக அறிவித்துள்ளது.
12 முதல் 17 வயதுக்குட்பட்ட 3,700 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் தங்களது தடுப்பூசி சிறுவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் கூறுகிறது.
இது தொடர்பான தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பிற உலகளாவிய கட்டுப்பாட்டாளர்களிடம் அடுத்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal