யாழில் 8 மாத கர்ப்பிணியை கொரோனா மையத்தில் இரவு வேளை இறக்கிச் சென்ற சுகாதார அதிகாரிகள்!

எட்டு மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்ணை எந்த ஏற்பாடுகளும் இன்றி உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை கொரோனா தடுப்பு மையத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

அவர்களின் பொறுப்பற்ற இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண் பல அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் அத்துடன் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய இக்கட்டான நிலை வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மைய நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது:

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டார்.

இவ்வாறு கர்ப்பிணி ஒருவர் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டால் அவர் வைத்தியசாலையிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் கூறுகின்றது. ஆனால் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை இரவு 8. 30 மணியளவில் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்தில் கொண்டு சென்று இறக்கிவிட்டு உட னேயே அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்துக்கும் எந்த முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதேவேளை வட்டுக்கோட்டை சிகிச்சை மையத்திற்கு இரவு வேளைகளில் கொரோனா நோயாளிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் அவர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்வதாகவும் தெரிய வருகின்றது.