இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக வருகிற 2-ந் தேதி வீரர்கள் புறப்பட உள்ளனர்.
இந்த நிலையில் அதே காலகட்டத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவரில் விளையாடுகிறது. ஜூலை 13 முதல் 27-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் இந்த செயலை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியா செய்யாததை இந்தியா சாதித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்சமாம் கூறியதாவது:-
வலுவான ஒரு அணி இருக்கும் போது அதே பலத்துடன் கூடிய மற்றொரு அணியை உருவாக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ள யோசனை சுவாரஸ்யமானது. இந்தியா இன்று செய்து வரும் முயற்சியை ஆஸ்திரேலியா 1990 மற்றும் 2000-ம் ஆண்டில் செய்திருந்தது. ஆனால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாளும் என தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட சர்வதேச தொடரில் இந்தியா விளையாடுகிறது. இரண்டுமே தேசிய அணிகளாகும்.
ஆஸ்திரேலியாவால் செய்யமுடியாததை இந்தியா சாதித்துள்ளது. இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.