சீனாவின் ஷென்ஸோ 11 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

சீனா அனுப்பிவைத்த ‘ஷென்ஸோ 11’ விண்கலம் ஒருமாதகால விண்வெளி ஆய்வுக்கு பின்னர் மன்கோலியா நாட்டில் நேற்று (18)  பத்திரமாக தரையிறங்கியது.

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் திகதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதனையடுத்து, ‘ஷென்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டது.

இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 17-ம் திகதி காலை 7.30 மணியளவில் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள ஜிக்குவான் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விண்கலத்தில் சீன விண்வெளி ஆய்வாளர்களான ஜிங் ஹெய்பெங்(50), சென் டாங்(37) ஆகியோர் சென்றனர். அவர்கள் இருவரும் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

திட்டமிட்ட ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திமுடித்த அவர்கள் இருவரும் சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள மங்கோலியா நாட்டின் வடபகுதியில் உள்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ‘ஷென்ஸோ 11’ விண்கலம் பத்திரமாக தரையிறங்கினர்.

இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்பட்டால், ரஷியாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை நிலைநாட்டிய பெருமை சீனாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3c42b6b6-8d6f-47a9-8db9-a9474bbc82fc_l_styvpf