தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் இன்று வரை இடம்பெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக்கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழ சர்வதேச தரப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்” என கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“இலங்கையின் ஆட்சியானது தொடர்ச்சியாக தமிழ் சமூகத்தை மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே முயலுகின்றது. அதன் சாட்சியமே முள்ளிவாய்க்கால் நினைவுக் கல்லை காணாமல் ஆக்கி நினைவு தூபியையும் இடித்து அழித்த நாகரிகமற்ற செயற்பாடு உறுதி செய்துள்ளது.

இச் செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களை தாம் கண்ணீர் விடுவதற்குக் கூட ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற செய்தி சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒரு தடவை உரத்துக் கூறப்பட்டுள்ளது.

எமது ஒன்ராறியோ சட்டமன்றம் நிறைவேற்றிய தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டமானது தாயகத்தில் நினைவுத் தூபி சிதைக்கப்பட்ட கடந்த மே-12 அன்று துணை ஆளுநர் ஒப்பந்தத்துடன் சட்டமூலமாகியமை ஈழத்தமிழர்களுக்கு ஆரோக்கியமான செய்தியே ஆகும். நாம் என்றும் ஈழத் தமிழர் களுக்கான நீதிக்காக குரல் கொடுப்போம். சர்வதேச மனித உரிமை தீர்மானங்களை உதாசீனப்படுத்தும் இலங்கை அரசாங் கத்துக்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

அவுஸ்ரேலிய நியூ சவுத்வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹக் மெக்டெர் மொட் ஒன்ராறியோ மாநில சட்டசபையின் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை சுட்டிக்காட்டி சர்வதேச சமூகம் தமிழினப் படுகொலையை அங்கீகரிப்பதில் பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது ஆரோக்கிய மான முன்னேற்றமாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும், இன்றுவரை இடம்பெற்று வரும் கட்டமைக்கப்பட்டஇனப்படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக் கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழ சர்வதேச தரப்பு களாகிய நாம் ஒன்றினைந்து குரல் கொடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.